தமிழகத்தில் சொத்து தகராறில் சொந்த தம்பியை கொலை செய்த அக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரின் அக்கா கலா பழனிவேலிடம் அடிக்கடி சொத்து சம்மந்தமாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பழனிவேல் கீழே விழுந்து மயங்கிய நிலையில் உள்ளதாக கூறி, கலா மற்றும் அவரது குடும்பத்தார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் பழனிவேலை அவரின் சகோதரி கலா மற்றும் குடும்பத்தினர், அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த கலா, அவரது கணவர், மகன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.