இலங்கையர்கள் இந்தியா செல்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என்றும், அதனை மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவித்தல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும், இப்பொழுது பணப்பரிமாற்றத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதுடன், அங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்தியாவில் பணப்பிரச்சினை ஓரளவிற்கு தீரும் வரை சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை தவிர்த்துக் கொள்வதானது அவர்களின் பயணத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.
ஏனெனில், இந்தியர்களே தற்பொழுது தங்களிடம் இருக்கும் பணத்தினை மாற்றிக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் துவண்டு போயிருக்கின்றனர்.
குறிப்பாக இந்திய பணத்தினை மாற்றுவதற்கு வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
தவிர, பணத்தினை மாற்றுவதற்கு பல்வேறு நடைமுறைச்சிக்கல்களும் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. ஆதார் அட்டை, பான் கார்ட் போன்றன ஆதாரமாக வங்கிகளில் காண்பிக்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்திருக்கின்றது.
இதனால் சுற்றுலாவாக வருவோர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். மேலும் இந்தியாவில் பெரும்பாலான ஏடிஎம் மெசின்களும் தற்பொழுது இயங்காத நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தான் இவ்வாறு அறிவுறுத்தல் வெளிவந்துள்ளது.
முன்னதாக இந்தியா சென்றுள்ள இலங்கையர்கள் அங்கு பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்து.
குறிப்பாக புனித யாத்திரை சென்றுள்ள சுமார் 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று குறித்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது குறித்து இந்திய துணைத்தூதரகம் உத்தியோகபூர்வமாக எந்தச் செய்திகளையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.