பிரான்சின் பிரபல தொலை தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிய 35 ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட ஏழு பேர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
பிரான்சின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான Orange தொலை தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Didier Lombard மற்றும் ஆறு அதிகாரிகள் மீது, ஊழியர்கள் பலரை மனோரீதியாக துன்புறுத்தி அவர்களது தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் ஏழுபேரும் பாரீஸில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
2008க்கும் 2009க்கும் இடையில் Orange நிறுவனத்தில் பணிபுரிந்த 35 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
அவர்களில் சிலர் மரணத்திற்க்கு முன் தங்கள் தற்கொலைக்கு Orange நிறுவனமும் அதன் மேலாளர்களும்தான் காரணம் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
அந்த நேரத்தில் தனியார் மயமாக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள Lombard முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
சுமார் 22,000 பேரை வீட்டுக்கு அனுப்ப முயன்றதோடு, சுமார் 10,000 ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
சில ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், தங்கள் குடும்பங்களை விட்டு செல்ல வேண்டியதாகியிருக்கிறது.
சில அலுவலகங்கள் மாறும்போது சில ஊழியர்கள் விட்டுச் செல்லப்பட்டிருக்கிறார்கள், சிலருக்கு முன்பை விட மிக குறைந்த நிலையிலுள்ள பணி வழங்கப்படிருக்கிறது.
ஒருமுறை, தனது ஊழியர்களைக் குறித்து, அவர்களை ஏதாவது ஒரு வழியில் வெளியேற்றி விடுவேன், அது ஜன்னல் வழியாகவும் இருக்கலாம், கதவு வழியாகவும் இருக்கலாம் என்று Lombard மூத்த மேலாலர்களிடம் கூறியதாக தெரிகிறது.
தான் நிறுவனத்தில் மேற்கொள்ள முயன்ற மாற்றங்கள் ஊழியர்களை வருத்தத்திற்குள்ளாக்கியது தனக்கு தெரியும் என்று கூறும் Lombard, ஆனால், அதனால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையோடு 15,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும். Orange நிறுவனம் மீது 75,000 யூரோக்கள் அளவிற்கு தடைகளும் விதிக்கப்படும்.