பிரதமர் நரேந்திர மோடி எந்ததொரு விடயங்களிலும் ஆவணங்களை முறையாக சரி பார்க்காமல் தொடர்ச்சியாக பொய் கூறி வருகின்றாரென காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.விராட் கப்பலை தனது சொந்த வாகனத்தை போன்று பயன்படுத்தினார் என குற்றம் சுமத்தினார்.
குறித்த குற்றச்சாட்டை, அப்போதைய கடற்படை தலைமை அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றவருமான எட்மிரல் எல்.ராமதாஸ் இதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,
“நரேந்திர மோடியின் மற்றுமொரு பொய் தற்போது அம்பலமாகியுள்ளது. கடற்படையின் உயர்மட்டத் தலைவர்கள், ராஜீவ் காந்தி குறித்த கப்பலை அரச முறைப் பயணமாக பயன்படுத்தியமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோடிக்கு பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
இதேவேளை எல்லையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஆவணம் இல்லை என்கின்றார் மோடி, அப்படியானால் அதிகாரபூர்வ ஆவணங்கள் கிடைக்காமை குறித்து இராணுவ தலைவரிடம் பேசுவதற்கு ஏன் மறுப்பு தெரிவித்து வருகின்றார்” என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.