முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வக்குப் சட்டம் என்பனவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய, அவற்றின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் பொறுப்பாளர்கள் முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹாலிம் தெரிவித்துள்ளார்.
அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களுக்கும் கடிதம் மூலம் அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு, முஸ்லிம் விவகார அமைச்சினால் பள்ளிவாசல்களுக்கு குறித்த கடிதம் ஊடாக சில ஆலோசனைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் அடிப்படைவாதத்தை ஊக்குவித்தல் அல்லது பிரசாரப்படுத்தல் என்பனவற்றைத் தவிர்த்தல், எந்தவொரு குழுவிற்கும் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்காதிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுமாயின், வக்குப் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் அவசரகால சட்ட ஏற்பாடு என்பன உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ், பொறுப்பாளர் சபை முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், பள்ளிவாசல்களில் இடம்பெறும் ஜும்மா தொழுகைகள் மற்றும் ஏனைய போதனை நடவடிக்கைகள் என்பனவற்றை காணொளியாக பதிவிட்டு, முஸ்லிம் விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.