விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திய போது தமிழர்களின் தலைவர்கள் அதனை ஆதரித்து செய்த தவறை இப்போது இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளில் முஸ்லிம் மக்களும் தலைவர்களும் செய்துவிட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந் நாட்டில் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளில் சர்வதேச ஆதரவு இருந்தது. அப்போது தமிழ் மக்களின் தலைவர்கள் செய்த தவறை இப்பொது முஸ்லிம் மக்களின் தலைவர்கள் செய்துவிட வேண்டாம்.
அன்று விடுதலைப்புலிகள் உருவாகிய போது அதனை ஆதரித்து தமிழர் தரப்பு தலைமைகள் தவறிழைத்தது. அதேபோல் இன்று பரவிவரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கவராதத்தை முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும் ஆதரித்துவிட வேண்டாம்.
இந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அதிகமாகவே உள்ளது. இதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் மக்களுக்கும் தலைவர்களுக்கும் அதிகமாகவே பொறுப்பு உள்ளது. அதேபோல் அரசாங்கமாக நாமும் எமது கடமை பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்.
இன்று முகப்புத்தகங்களில் இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறாக விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாமே முஸ்லிம் சமூகத்தில் மோதல் நிலைமைக்கு தள்ளுவதாக அமைந்துவிடும். ஆகவே இதனை கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.