இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது என குறிப்பிட்டு பாகிஸ்தான் விமானத்தை நடுவானில் மடக்கிய இந்திய விமானப்படை விமானங்கள், ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின.
பாகிஸ்தானிற்கு சொந்தமான அன்டனோவ் ஏ.என்.12 ரக சரக்கு விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானப்படை செய்தி தொடர்பாளர் கப்டன் அனுபம் பனர்ஜி கூறுகையில்,
‛கராச்சியிலிருந்து டில்லி புறப்பட்ட அன்டனோவ் ஏ.என்.12 ரக சரக்கு விமானம், வழக்கமான பாதையை மாற்றி குட்ச் விமானதளத்திற்கு 70 கி.மீ, வடக்கே இந்திய எல்லைக்குள் நுழைந்ததை இந்திய விமானப்படை ரேடார் மூலம் கண்டறிந்தது. பாகிஸ்தான் விமானத்தை தடுத்து மடக்கிய SU -30 MKI ரக இந்திய போர் விமானங்கள், அதனை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின. என்றார்.
விமானம் இந்திய எல்லைக்குள் பறந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் விமானிகளுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
எல்லைக்குள் அத்துமீறியோ, தவறுதலாகவே நுழையும் அண்டைநாட்டு விமானங்களை எச்சரித்து திருப்பியனுப்புவதே வழக்கம். எனினும், இந்திய தேர்தல் நெருங்குவதால் அரசியல் காரணங்களிற்காக விமானத்தை தரையிறக்கியிருக்கலாமென கருதப்படுகிறது