டில்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 8ஆவது முறையாக தகுதி பெற்றது நடப்பு சம்பியன் சென்னை.
டூபிளெஸ்ஸிஸ்-வட்ஸன் அபாரமாக ஆடி அரைசதங்களை விளாசினர்.
ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ்-டில்லி கபிடல்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 2 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
குவாலிபையர் 1 ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியுற்றது சென்னை. அதே நேரத்தில் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஹைதரபாதை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தியது டில்லி.
குவாலிபையர் 2 ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். ரொஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
சென்னை அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷர்துல் தாகுர் சேர்க்கப்பட்டிருந்தார்.
டில்லி அணி தரப்பில் பிரித்வி ஷா-ஷிகர் தவன் களமிறங்கினர். இதில் 5 ரன்கள் எடுத்த பிரித்வியை எல்பிடபிள்யு முறையில் அவுட் செய்தார் தீபக் சஹார். அவருக்கு பின் ஷிகர் தவன் 18, கொலின் மன்றோ 27 ரன்களுக்கு வெளியேறினர்.
பின்னர் கப்டன் ஷிரேயஸ் ஐயர்-ரிஷப் பந்த் இணை சேர்ந்து ஸ்கோரை உயர்த்த முயன்றனர். எனினும் 13 ரன்கள் எடுத்திருந்த ஷிரேயஸ் ஐயரை அவுட்டாக்கி வெளியேற்றினார் தாஹிர். 3 ரன்களுடன் அக்ஸர் பட்டேல் வெளியேறினார். 13ஆவது ஓவரின் 5 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்திருந்தது டில்லி. அவரைத் தொடர்ந்து ரூதர்போர்ட் 10, கீமோ பால் 3 ரன்களுக்கு வெளியேறினர்.
ஒருமுனையில் பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தி வந்த ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசி அவுட்டானார்.
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது டில்லி.
இஷாந்த் சர்மா கடைசி ஓவரில் தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 10 ரன்களை விளாசினார்.
சென்னை தரப்பில் தீபக் சஹார் 2-28, ஹர்பஜன் சிங் 2-31, ரவீந்திர ஜடேஜா 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை தரப்பில் களமிறங்கிய வட்ஸனும், டூபிளெஸ்ஸிஸும் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 50 ரன்களுடன் டூபிளெஸ்ஸிஸும், 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் வட்ஸனும் அவுட்டாகி திரும்பினர். டூபிளெஸ்ஸிஸ் தனது 12ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.
அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 11 ரன்களுக்கும், கப்டன் தோனி 9 ரன்களுடனும் வெளியேறினர். அம்பதி ராயுடு 3 பவுண்டரியுடன் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். பிராவோ வெற்றிக்கான பவுண்டரியை விளாசினார்.
19 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து வென்றது சென்னை. தில்லி தரப்பில் பெளல்ட், இஷாந்த் சர்மா, அக்ஸர் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் 8ஆவது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள சென்னை, வரும் 12ம் திகதி ஹைதராபாதில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளும் நான்காவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.