நாட்டில் தற்போது வன்முறையுடன் கூடிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் வாயிலாக இன்று காலை அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
குமார் சங்கக்காரவின் டுவிட்டர் பதிவில், “இலங்கை மக்களே ஒன்று சேருங்கள். கண்களை திறக்க வேண்டும். வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும்“ என மக்களுக்கு டுவிட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமாதானமாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்பாக வையுங்கள், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் எனவும், ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் என சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது ருவிற்றர் பதிவில்- “ இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம்.
ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள்.
எமது எதிர்காலமும் உங்களது தற்போதைய நடவடிக்கையில் தான் இருக்கிறது. அன்பை பரப்புங்கள். இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்“ என தெரிவித்துள்ளார்.