அசாதாரண நிலைமையையடுத்து, பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி பொலிசார் விளக்கமளித்து வருகிறார்கள்.
இதன் ஒரு கட்டமாக, இன்று (14) புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலிபானவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் கம்பளை பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பலியவதன கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
பாடசாலையின் பாதுகாப்பு¸ மாணவர்களின் பாதுகாப்பு¸ பொய் வதந்திகளிற்கு ஏமாறாமை, முப்படைகளினால் முன்னெடுக்கபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்¸ பயங்கரவாதிகளை கண்டு பிடிக்கும் உத்திகள்¸ மேலதிகமாக தேவைப்படும் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து பொலிசார் விளக்கம் அளித்தனர்.
பாடசாலையின் அதிபர் ஆர்.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பெற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் அங்கத்தினர் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் பலியவதன, கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தபட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளுக்குமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச் செயற்திட்டத்திற்கு பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். யாரும் பொய் வதந்திகளை நம்ப வேண்டாம். மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள். அவசர பாதுகாப்பிற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். இபபிரதேச பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளனர். அதே போல் உளவு பிரிவும் திறம்பட செயற்பட்டு வருகின்றது. ஆகவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை முன்னெடுத்து செல்லுங்கள் என்று கூறினார்.