இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக வேரறுக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டது
அந்தவகையில், இலங்கையின் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு சீனாவிலிருந்து 260 கோடி ரூபாய் நன்கொடை, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய 150 கோடி ரூபாய் பெறுமதியான 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகள், பயங்கரவாத மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழிநுட்ப கருவிகளையும் அறிவையும் இலங்கைக்கு வழங்கல் உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இருநாட்டு பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைப்புக்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இந்த சந்திப்பில் சீன ஜனாதிபதி தெரிவிக்கையில், உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அதிருப்தி தெரிவித்த சீன ஜனாதிபதி, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும் என்று தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி, அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சீன கடன் உதவிகளினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.