புத்தளம், காலி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந் தவர்கள் வாழ்ந்து வருவதாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே பிரதியமைச்சர் நிமல் லான்ஸா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, புத்தளம் மாவட்டத்தில் சிரம்பிட்டிய பிரதேசத்தில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஆட்கள் வசிக்கின்ற கிராம சேவகர் பிரிவுகள் யாவை? தற்போது அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி ஆட்கள் இலங்கையின் வேறு எந்தப் பிரதேசங்களிலாவது வசிப்பதாக அறியவந்துள்ளதா? இவர்களுக்கான உரிமை அரசால் உறுதிசெய்யப்பட்டுள்ளதா? அந்த மக்களின் கலாசார தனித்துவங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகளை பேணி வாழ்வதற்காக அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா எனக்கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, புத்தளம் சேனைக்குடியிருப்பு, பாலாவி கிராமசேவகர் பிரிவுகளில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 113 பேர் வசிக்கின்றனர்.
காலி, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிய தொகையினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இலங்கை பிரஜையொருவருக்கு உள்ள அனைத்து சலுகைகளும் எமது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் கலை, கலாசாரங்கள் பேணப்படுவதற்கு சுதந்திரமளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கூறுவதாயின் இசைக்குழுக்களை வைத்து, இசை நிகழ்ச்சிகளைக்கூட இவர்கள் நடத்துகின்றனர். அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது என்றார்.