இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயமா என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் என சுட்டிக்காட்டிய ராணுவ தளபதி, நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகள் குறித்தும் இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.
இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் கிடையாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அத்துடன், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள், 9 மாதங்கள் மற்றும் இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் குறுகிய, இடை மற்றும் நீண்டகால திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புத்தளம் – நாத்தாண்டி – துன்மோதர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது என ராணுவ தளபதி குறிப்பிட்டார்.
ராணுவத்தினர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படவில்லை என்பதில் தனக்கு 95 சதவீத நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறினார்.
ராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் வகையில் வெளியான சிசிடிவி காணொளியை திரையில் ஒளிபரப்பியது பற்றி விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கிருந்த ராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியிலுள்ள பெல்ட்டை சரிசெய்யும் வகையிலான காட்சி, தவறான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறிய அவர், விரைவில் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை விடுதலை செய்வது குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தெஹிவளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரையே அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விடுதலை செய்வது தொடர்பில் தன்னிடம் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், ஒன்றரை வருடங்களுக்கு தன்னால் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என தான் அவருக்கு பதிலளித்ததாகவும் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.