அமெரிக்காவில் கைகள் இல்லாத பெண் விமானி ஒருவர், கால்களால் விமானம் ஓட்டி சாதனை செய்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் கால்களால் ஓவியம் தீட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். கார் ஓட்டி சாதனை புரிந்தவர்களையும் நாம் அறிவோம். ஆனால், இங்கு ஒரு பெண் கைகள் இல்லாமல் கால்களால் விமானமே ஓட்டுகிறார்.
ஆம். அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ்(30). இவர் ஒரு பெண் விமானி. ஜெசிகா பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவராவார். இதனால் பெற்றோர் கடும் வேதனைக்கு உள்ளாகினர். ஆனால், ஜெசிகா வளர வளர அவரது அறிவும், ஆறுதலான பேச்சும் அவர்களை சந்தோஷப்படுத்தியது.
ஜெசிகாவின் சிறு வயதில், உறவினர் ஒருவருடன் விமானத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்று முதல் விமானத்தின் மீதும், விமானியின் பணி மீதும் தீராத ஈர்ப்பு கொண்டுள்ளார். ஜெசிகா பட்ட படிப்பை முடித்த பின்னர், இதற்கான பயிற்சி பெற விரும்பினார்.
சரியான பயிற்சியாளர், முறையான வழிமுறைகள் ஆகியவை கிடைக்கவே வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டு, கடந்த 2008ம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார். இதனால் கைகள் இன்றி விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி எனும் சாதனை புரிந்தார்.
ஜெசிகா விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல், கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் என அனைத்து துறைகளிலும் வித்தைகளை கற்றுக் கொண்டு ஆல்-ரவுண்டராகவே உள்ளார்.
மேலும் இவர் ‘டோ-டாக்ஸ்’ எனும் யூடியூப் பக்கத்தின் மூலம் கைகள் இல்லாத மாற்று திறனாளிகளின் அன்றாட வேலைகளில் இருக்கும் பலுவை குறைத்து எளிதாக செய்ய பயிற்சியளித்தும், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தும் வருகிறார். இதனால் தன்னம்பிக்கையின் மறு உருவமாகவே மாறியிருக்கிறார் ஜெசிகா.