10 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தான் கலந்துகொண்டிருந்த போது இராணு வமும், பொலிஸாரும் தனது வீட்டுக்குள் நுழைந்தமை தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும்
எனவே ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக சபாநாயகர் கருஜெயசூரியவிடமும், சர்வதேச நாடாளுமன்ற அமைப்புக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தான் கலந்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அண்மையில் உள்ள தனது இல்லத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடத்தியமைக்கு எதிராகவே தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்துக்கிடமான இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் யாழ்ப்பாணம் – நல்லூர் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை ஒன்பது முப்பது மணிக்குச் சென்ற இராணுவத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனை வினவியுள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வீட்டில் இல்லை என அவரது மனைவி இராணுவத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் ஒவ்வாரு அறைகளையும் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய இராணுவத்தினர், பிள்ளைகளின் புத்தகங்களை கூட விட்டுவைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசனம் வெளியிட்டார்.
அதேவேளை கிளிநொச்சி- உருத்திரபுரத்தில் வசிக்கும் தனது சாரதியின் வீட்டிலும் மே மாதம் 7 ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவமும், பொலிஸாரும் இணைந்து சோனை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையிலே, சபாநாயகர் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புக்கும் தான் முறையிட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.