யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தின் 3 கட்டங்களாக இடம்பெறும் புனரமைப்பு பணிகளில் முதல் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவுகட்டத்தை எட்டிவருகின்றன.
இந்த புனரமைப்பு பணிகளில் தற்போது 80 மீற்றர் நீளமாக துறைமுக மேடையை அமைக்கும் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டிவருகிறது. அத்துடன் ஆழமாக்கும் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மீனவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதனுடன் வலை தயாரிக்கும் மண்டபம், தகவல் பரிமாற்ற மையம், எரிபொருள் வழங்கும் நிலையம், மீனவ சனசமூக நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவ சங்கக் கட்டடம், மலசலகூட வசதிகள், நீர் மற்றும் மின்சார வசதி, சமிக்ஞை கோபுரங்கள் ஆகியன உருவாக்கப்படுகின்றன.
அடுத்து இரண்டாம் கட்டமாக தற்போது இருக்கின்ற துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்தல், மீன் ஏல விற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் முகாமைத்துவ கட்டடம், நிர்வாகக் கட்டடம், மின் பிறப்பாக்கிகள், கதிரியக்க கட்டுப்பாட்டுப் பிரிவு, சிற்றுண்டிச்சாலை, அலுவலகர் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதி புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.
மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் 205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்டப்படுகின்றன. கடற்படையினரின் கட்டுப்பட்டில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஓகஸ்ட் 22 ஜனாதிபதியால் புனரமைப்பு செய்ய அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்