இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் பிரிவுக்கு, சவுதி தொழிலதிபருடன்டயானாவுக்கு ஏற்பட்ட நெருங்கிய உறவே முதல் காரணமாக முன்வைக்கப்பட்டாலும், சார்லஸ் பற்றிய சில ரகசியங்கள் வெளிவரவில்லை.
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணிடம் எவ்வித பாரபட்சம் காட்டாமல், அவளை காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசர் சார்லஸ் குறித்து இங்கிலாந்து நாடே மெய்சிலிர்த்து போனது.
ஆனால், அந்த காதலுக்கு பொய்ச்சாயம் பூசிவிட்டார் சார்லஸ். 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிவதாகவும், டயானாவுக்கு, மற்றவர்களுடன் ஏற்பட்ட சில முக்கிய தொடர்புகளே இதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது.
மேலும், டயானா தனது காதல் கணவர் சார்லஸ் குறித்த ரகசியங்களை ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளார். இந்த டைரி அரச குடும்பத்திற்கு சென்றதையடுத்து, எங்கே இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியில் கூறிவிடுவாரோ என்ற காரணத்தினால் கூட இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகின.
இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்த குதிரையேற்ற வீரர் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் தொடர்பு, ரக்பி விளையாட்டு வீரர் வில் கார்லிங் மீது டயானாவுக்கு ஈர்ப்பு, இஸ்லாமிய கலை நிபுணரான ஆலிவர் ஹோயருடன் டயானாவுக்கு தொடர்பு என பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும், சார்லஸை விட்டு டயானா பிரிவதற்கு, சார்லஸ்க்கும், கமீலாவுக்குமான தொடர்பும் ஒரு காரணம் என முன்வைக்கப்படுகிறது.
அதாவது, டயானாவை திருமணம் செய்வதற்கு முன்னரே, சார்லஸ்க்கு கமீலாவுடன் நெருக்கம் இருந்துள்ளது.
இளவரசர் சார்லஸின் வாழ்க்கை வரலாறு குறித்து `சார்லஸ்: ஹார்ட் ஆஃப் எ கிங்’ எனும் தலைப்பில் ஒரு புத்தகத்தை கேத்தரின் மேயர் என்பவர் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, அதில், இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா இருவருமே தங்களுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை வேறு காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதற்குக் காரணமாக, கமீலா பார்க்கர் பவுல்ஸ் என்ற பெண்ணுடன் சார்லஸுக்கு ஏற்கெனவே காதல் இருந்து வந்தது என்பதை டயானா தெரிந்துகொண்டார். ஆகவே திருமணத்தை நிறுத்த முயன்றார்.
அதேபோல, டயானாவுக்கு முறையற்ற உணவுப் பழக்கம் இருந்ததாலும், தன்னுடைய ஏதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லை என்பதாலும், சார்லஸ் இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தன்னால் சார்லஸுடன் இணைந்து வாழ முடியாது என்பதை ஏற்கெனவே தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவரிடம் டயானா கூறியிருந்தார் என்பதையும் கேத்தரீன் மேயர் குறிப்பிடுகிறார்.