புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்ப வைக்க முயன்ற குற்றச்சாட்டில், அப்போதைய வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவிற்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
அப்போதைய வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க, உபபொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகயன் ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக புங்குடுதீவை சேர்ந்த சுவிஸ் குமார் (மகாலிங்கம் சசிக்குமார்) அடையாளம் காணப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சமயத்தில் அரசியல்வாதியின் துணையுடன் இவர் தப்பிச்செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. டிஐஜி லலித் ஏ ஜெயசிங்க, ஸ்ரீகயன் ஆகியோர் மீது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு, லலித் ஏ ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஸ்ரீகயன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பொலிஸ் அதிகாரிகளிற்கும் எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது.
குற்றப்பத்திரிகையில் 26 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.