கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அந்த வைத்தியர் நாற்பது கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களுக்கு உரித்துடையவர் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து, குறித்த வைத்தியர் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
நாற்பது கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் அவரிடம் காணப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததுடன், அவை ஏதேனும் கடும்போக்குவாத அல்லது பயங்கரவாத குழுவிடமிருந்து கிடைத்துள்ளதா என ஆராயும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வைத்தியரின் பெயரில் காணப்படும் 17 காணி உறுதிப் பத்திரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் காணிகள் குருணாகலை சூழவுள்ள இடங்களில் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேகநபரான வைத்தியர் சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாடுகளில், நான்கு முறைப்பாடுகள் அவருடன் பணியாற்றிய வைத்தியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய முறைப்பாடுகளை 28-30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, இந்த வைத்தியர் சில பெண்களுக்கு மேற்கொண்ட மூன்றாவது மகப்பேற்று சத்திரசிகிச்சையின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய எல்.ஆர்.ரி அறுவைச் சிகிச்சையை முன்னெடுக்காது, அது மேற்கொள்ளப்பட்டதாக போலியாக பதிவிட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் தாதி அதிகாரியொருவர், வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்து, வைத்தியர் மகப்பேற்று சத்திரசிகிச்சையின் பின்னர் தமது கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது கர்ப்பப்பை அகற்றப்பட்டதை பின்னரே அறிந்துகொண்டதாக அந்தப் பெண், வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான வைத்தியர் தாயொருவரின் பெயரை மாற்றி, சிறுவொன்றை வேறு தரப்பினருக்கு வழங்குவதற்கு முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் நிருவாக அதிகாரியொருவர் இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதுடன், போலி ஆவணத்தைத் தயாரித்து சிசுவை வேறு தரப்பிற்கு சட்டரீதியற்ற முறையில் வழங்குவதற்கு சந்தேகத்திற்குரிய வைத்தியர் செயற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.