கிழக்கிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சு நிதிகளை முஸ்லிம் பகுதிகளிற்கு மட்டுமே ஒதுக்கி வருகிறார்கள். கிழக்கிற்கான அபிவிருத்தி நிதி காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கே திரும்ப திரும்ப வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேச செயலக பகுதிகளில் வறுமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் இரா.துரைரெட்ணம்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலத்தின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் மத்தி அரசும், மாகாணசபையும் வேலைத்திட்டங்களைச் செய்யும் போது தமிழர்களும், தமிழ் பிரதேசங்களும் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்தன. கடந்த காலத்தைப் போல் 2019இல் இருந்து புறக்கணிக்கப்படக் கூடாது. இதை சீரமைக்க ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி ஓதுக்கீடு செய்யும் போது வறுமை, விகிதாசாரம், சனத்தொகை, காணியின் பரப்பளவு பார்க்கப்பட வேண்டும். இவை பார்க்கப்படாததால் வாகரை, கிரான், செங்கலடியில் ஒரு பகுதி, வவணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசங்கள் இன்னும் வறுமையில் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கான கல்வி வலயத்தை கடந்த காலத்தில் பிரித்து விட்டார்கள். இனிமேல் தமிழர்களாகிய நாங்கள் தமிழ்பாடசாலைகளை மட்டும் வைத்துக் கொண்டு புதிய வலயங்கள் உருவாக்க வேண்டும்.
14 பிரதேச செயலகத்திற்கும், 14உள்ளூராட்சி சபைகள் இருக்க வேண்டும். கிரான், வாழைச்சேனை, வாகரை பகுதிகளிலுள்ள காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதற்காக 12உள்ளூராட்சி சபைகளே இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கிரானுக்குரிய உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
புதியஅரச அலுவலகங்கள் மாவட்டரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் முஸ்லிம் பகுதிகளுக்குரிய அலுவலகங்கள் முஸ்லிம் பகுதிக்கும், தமிழ் பகுதிகளுக்குரிய அலுவலகங்கள் தமிழ் பகுதிகளுக்கும் திறக்கப்பட வேண்டும்.
முப்படையினருக்கும், பொலிசாரும் இனிமேல் முஸ்லிம் கிராமங்களில் முகாம் அமைக்காமல் தமிழ் பகுதிகளில் முகாம் அமைப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.
முப்படைகளுக்கும்,பொலிசாருக்கும் ஆட்களை திரட்டுவதில் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு மத்தியஅரசு விகிதாசார ரீதியாக பொலிசாரை நியமிக்க வேண்டும்.
தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் தாம் கடமையாற்றுகின்ற பாடசாலையின் பொதுவான முடிவுகளை ஏற்று தனது கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும். பாடசாலையின் பொதுவான முடிவுகளுக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது.
தமிழ்பிரதேசங்களில் அரச நிருவாகங்களில் வேலை செய்கின்ற முஸ்லிம்களுக்கு கலாசார விடயங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் மதங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா?
முஸ்லிம் அமைச்சர்கள் அரசுடன் இணைந்து கொண்டு அரசின் நிதி ஓதுக்கீட்டு கொள்கைகளுக்கு அப்பால் சென்று தங்களது இனத்திற்காகவும் தேர்தலின் போது வாக்குகளைப் பெறுவதற்குமாகவே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டன. குறிப்பாக, கோறளைப்பற்று வடக்கு (வாகரை), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று(செங்கலடியில் ஒரு பகுதி), மண்முனை மேற்கு (வவுணதீவு), மண்முனை தென் மேற்கு(பட்டிப்பளை), போரதீவுப்பற்று (வெல்லாவெளி) போன்ற பிரதேசசெயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்களை உற்று நோக்குவோமேயானால் நிதி ஓதுக்கீட்டைப் பொறுத்தவரையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருபது வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றன. இங்கு வறுமை தாண்டவமாடுகின்றது.
இதேவேளை காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வருடாவருடம் நிதிஓதுக்கீடு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. கேள்வி கேட்கும் பட்சத்தில் அமைச்சுக்கான நிதி, அமைச்சு அனுமதியுடன் அபிவிருத்தி வேலைகள் செய்யப்படுகின்றன என்கிறார்கள். வருடந்தோறும் கிராம சேவையாளர் பகுதிகளுக்கு மேலும்மேலும் ஓதுக்கப்படும் நிதி ஓதுக்க வேண்டிய அவசியமே இல்லை.
வறுமைப் பகுதிகள் இருக்க வறுமை அற்ற கிராம சேவையாளர் பிரிவிற்கு நிதி ஓதுக்கீடு செய்வது நிறுத்தப்பட வேண்டும். புதிதாக மத்திய அரசினால் நியமிக்கப்படப் போகும் அமைச்சர்கள் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படப்போகும் அமைச்சர்கள் ஓருபக்கச் சார்பாக கொள்கைக்கு முரணாக நிதி ஓதுக்கீடு அபிவிருத்தி, நியமனங்கள், வழங்கும் பட்சத்தில் அவர்களை தமிழர்களுக்குரிய அமைச்சர்களாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இனி தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதற்கான எதிர்ப்பை மிக விரைவில் தெரிவிக்க இருக்கின்றோம்.
வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் செயற்படவேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்தின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய செயற்படுவார்களானல் அவர்கள் தமிழ் சமூகத்தினால் அந்நியப்படுத்தப்படுவார்கள். அமைச்சர் றிசாத் பதியூதின் மீது விசாரணை செய்யப்பட வேண்டும். விசாரணைகளில் அவர் குற்றவாளியென நிரூபணமானால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும்
ஒருஇனம், கட்சி சார்பாக செயற்படுகின்ற ஆளுனரையும் பதவி நீக்கம் செய்து அரசியல் சாயமற்ற, நேர்மையான மூன்று இனங்களுக்கும் சேவைசெய்யக் கூடிய சிரேஸ்ட அதிகாரி ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும். தொடர்ச்சியாக கட்சி ரீதியாகவும், இனரீதியாகவும் ஆளுனர் செயற்பட்டுக் கொண்டு வருவதனால் தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்வில்லை. மூன்று மாத காலத்திற்கிடையில் கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண நிருவாகத்தை கட்சி ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என பல புகார்கள் உள்ளன.
எனவே மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்களும் ஐக்கியமாகவும், ஓற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த விடயங்களில் இனியாவது தவறு விடாமல் மேற் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சீரமைத்து கிழக்கு மாகாணத்தில் பிரித்தாளும் தந்திரத்தை கைவிட்டு கிழக்கு மக்கள் ஓன்றாக வாழ்வதற்கு வழிசமைக்க வேண்டும். இதில் பாராமுகமாக இருந்தால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தங்களிடம் உள்ள வாக்குப்பலத்தின் ஊடாக தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிருபித்துக் காட்டுவார்கள் என்றார்.