குருநாகல் போதனா மருத்துவமனையின், நிர்வாக சபையிடம் நேற்று அவர்கள் குறித்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
முன்னதாக, நேற்றைய தினமே, வாரியபொல மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் குறித்த மருத்துவருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
கடந்த 2015ம் ஆண்டு மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நிலையில், அந்த காலப்பகுதி முதல் தமக்கு குழந்தை பேறு இல்லாது போயுள்ளதாக குறித்த பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், முறைப்பாடுகளை முன்வைத்துள்ள குறித்த ஐந்து பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனையின் மருத்துவர் குறித்த முறைப்பாடுகள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ள முடியும் என காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மருத்துவர், தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று கூடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தின் போது குறித்த மருத்துவர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட மருத்துவர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற 42 வயதுடைய மருத்துவர் குருநாகல் காவல்துறையினரால் கடந்த 24ம் திகதி இரவு கைது
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.