சஹ்ரான் குழுவின் பயங்கரவாத தாக்குதலுடன், நாட்டில் இனங்களிற்கிடையிலான பிளவும், சந்தேகமும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறின் பின்னர் இனப்பிரச்சனை விவகாரம் மூன்றாம், நான்காம் பிரச்சனையாக பின்தள்ளப்பட்டு, பயங்கரவாத அச்சுறுத்தல், இனங்களிற்கிடையிலான முரண்பாடு, பொருளாதார வீழ்ச்சியென்பன முன்னணிக்கு வந்து விட்டன.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீதான சந்தேகத்தையும், அசௌகரியத்தையும் அதிகரிக்கும் விதமான சம்பவங்களே நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. மற்ற இனங்களின் சனத்தொகையை கட்டுப்படுத்த முஸ்லிம்கள் நூதனமாக முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் தமிழ், சிங்கள மக்களின் மனங்களில் கடந்த காலங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சந்தேகத்தை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இனமுரணை வளர்க்க உருவாக்கப்பட்ட கதையாகவும் அது இருக்கலாம்.
இந்தநிலையில், சஹ்ரான் குழுவின் தாக்குதலின் பின்னர் இந்த விவகாரம் மீளவும் விஸ்பரூபம் எடுக்கிறது. அதற்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறது 8,000 கருத்தடை சிகிச்சை தகவல்.
குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கருத்தடை சிகிச்சை செய்தார் என்ற தகவலுடன் இந்த விவகாரம் கொளுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. எனினும், அந்த குற்றச்சாட்டை பொலிசார் தெரிவிக்கவில்லை.
முஸ்லிம் மக்கள் மீது சந்தேகம் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை அறிய, ஒரு சோற்று பதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இதுவும் குருநாகலில்தான் நடந்தது.
கல்கமுவ பிரதேசத்தில் சிங்கள குடும்பமொன்றில் திருமண நிகழ்வு நடந்துள்ளது. திருமணத்திற்கு சமையல்காரராக அயல் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர்தான் அழைக்கப்பட்டிருந்தார்.
திருமண நிகழ்விற்காக அவர் சமையல் வேலையை ஒரு பக்கம் ஆரம்பித்து விட்டார். மறுபக்கம் திருமண நிகழ்வு நடந்தது. பின்பகுதிக்கு சென்ற ஒருவர், முஸ்லிம் நபர்தான் சமையல் செய்கிறார் என்பதை கண்டார். தகவல் திருமண நிகழ்வில் காட்டுத்தீயாக பரவியது.
அந்த திருமண நிகழ்வில் யாருமே மதிய உணவருந்தவில்லை. வந்திருந்தவர்கள் எல்லோரும், கொண்டு வந்திருந்த அன்பளிப்பு பொட்களை மணமக்களிற்கு கொடுத்து வாழ்த்தி விட்டு, உணவருந்தாமல் சென்றுள்ளனர்.