ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள்.
அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களை பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள்.
இதற்கு நபிகளார் இவ்வாறு பதில் அளித்தார்கள் :
‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார்.அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை திட்டியிருப்பர்; ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பர்; ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளில் இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும். இன்னும் சிலவற்றை மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும் பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவர். (அவரே திவாலாகிப்போனவர்). (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம் 5037).
உலகில் நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், தான தர்மம், உதவிக்கரம் நீட்டுதல், சமூக சேவை, பொது சேவை, நற்சேவை, நல்லறம் போன்றவற்றின் மூலம் கிடைக்கப்பெறக் கூடிய நற்கூலிகள் தான் மறுமையின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். இத்தகைய சொத்துக்களை சேமித்து வைத்திருப்பவரே மறுமையில் பெரும் செல்வந்தராக மதிக்கப்படுகிறார்.
உலகில் தவறு செய்த செல்வந்தரிடமிருந்து, மறுமையில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது. மறுமையில், செல்வந்தரால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு எப்படி நஷ்டஈடு வழங்க முடியும்?
அங்கே பணத்திற்கும், பொருளுக்கும் வேலை இல்லை. பாதிப்பை ஏற்படுத்தியவரின் நன்மைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். நன்மைகள் அனைத்தும் தீர்ந்த பிறகும் இன்னும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்று, நீதி கேட்கும் சமயம், பாதிக்கப்பட்டவரின் பாவங்களை எடுத்து, பாதிப்பை ஏற்படுத்திய வரின் தலையில் இறைவன் போட்டுவிடுவான்.
உலகில் நன்மைகளை செய்தவர் மறுமையில் திவாலாகி விடுகிறார். இங்கே தீமைகளை செய்தவர் அங்கே செல்வந்தராக மாறிவிடுகிறார்கள்.
உலகில் வாழும் நாம் பிறருக்கு செய்யும் அநீதிகள் மூலம் உலகில் நாம் செய்த நல்லறங்கள் யாவும் மறுமையில் பாழாகி போய்விடுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).
“அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசம் அளிப்பான். இறுதியில் அவனை பிடித்து விட்டால், அவனை தப்ப விடமாட்டான்” என இவ்வாறு கூறிவிட்டு “அநீதி இழைத்த ஊர்(காரர்)களைப்பிடிக்கும் போது இவரே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது” (திருக்குர்ஆன் 11:102) எனும் இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பாளர்: அபுமூஸா அல்அஷ்அரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5039)
‘அநீதி இழைப்பதிலிருந்து தவித்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது மறுமை நாளில் இருள்களாக காட்சிதரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 5034)
இந்த உலகில் அநீதி இழைத்தவன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அல்லது தனது செல்வாக்கை பயன்படுத்தி, அநீதியான நீதியை நிலைநாட்டிவிடலாம். ஆனால் மறுமையில் இந்த அதிகாரம், சொல்வாக்கு, செல்வாக்கு யாவும் செல்லுபடியாகாது.
அங்கே நீதி தராசு ஒன்று உண்டு. அது மனித நியாயங்களையும், அநியாயங்களையும் நீதமான முறையில் அளந்துகாட்டி விடும்.
இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (21:47)
இதுதொடர்பாக ஆயிஷா (ரலி) கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அமர்ந்து தனது நிலைமையை எடுத்துக்கூறுகிறார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அடிமைகள் உண்டு. அவ்விருவரும் என்னிடம் பொய்யாக நடந்து கொள்கிறார்கள்; மேலும், எனக்கு மோசடி செய்கிறார்கள்: இன்னும், எனக்கு மாறு செய்கிறார்கள்; இதனால் நான் அவர்களை திட்டிவிடுகிறேன்; இன்னும் நான் அவர்களை அடிக்கவும் செய்கிறேன். நான் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை எப்படி?’ என வினவுகிறார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் அவர்கள் உனக்கு செய்த பொய், மோசடி, மாறு ஆகியவற்றையும், நீ அவர்களுக்கு வழங்கிய தண்டனையையும் நீதி தராசில் வைத்து நிறுக்கப்படும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு நிகராக உனது தண்டனை அமைந்துவிட்டால், அது உனக்கு போதுமானதாகும். இதனால் உன்மீது ஏதும் பாவம் கிடையாது. ஆனால், அவர்களின் குற்றங்களை விடவும் உனது தண்டனை குறைவாக அமைந்து விட்டால், இது உனக்கு சிறப்பானதாகும். மாறாக அவர்களை குற்றங்களை விடவும் உனது தண்டனை மேலோங்கிவிட்டால், அவர்களுக்காக உமது நன்மைகள் பிடுங்கப்பட்டு நீ பழிவாங்கப்படுவாய்’ என கூறினார்கள்.
இதை கேட்ட அந்த மனிதர் சப்தமிட்டு அழ ஆரம்பித்து, கண்ணீர் வடித்தார். அவரைப்பார்த்து நபி (ஸல்) அவர்கள் ‘திருக்குர்ஆனில் வருகிற (21:47) இந்த வசனத்தை நீ படிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
‘உலகில் திவாலாகிப்போனால், முயற்சி செய்து இழந்ததை மீட்டிவிடலாம் மறுமையில் திவாலாகிப்போனால், இழந்த நன்மைகளை ஒரு போதும் மீட்டிவிட முடியாது. ஏனென்றால், மறுமையில் நன்மைகள் புரிய முடியாது. உலகில் நாம் செய்த பாவ-புண்ணியங்களுக்கு அங்கே பிரதிபலன் வழங்கப்படும். நன்மை செய்தால் சுவன இன்பம், தீமை செய்தால் நரக வேதனையின் துன்பம் கிடைக்கும். எனவே, எவர் ஒரு அணுவளவு நன்மை புரிந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவர் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அத(ற்குரிய பல)னையும் அவர் கண்டுகொள்வார்’ (திருக்குர்ஆன் 99:7,8)
ஆதலால், உலகில் நாம் வாழும் போது யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. மனிதர்களின் உரிமை மீறல் விஷயத்தில் ஈடுபடக்கூடாது. ஒரு வேளை மனித உரிமை மீறல் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவனிடம் சென்று அவனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையையும், நிவாரணத்தையும் நிறைவேற்றி, அவரிடம் பரிபூரணமான மன்னிப்பையும் பெற்றிட வேண்டும். இது தான் நாம் மறுமையில் திவாலாகாமல் இருப்பதற்கு சிறந்த வழி. இதை விட்டால் வேறு வழி இல்லை.
இத்தகைய சிறந்த வழியை கடைப்பிடிக்கும்படி கருணை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.