கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். சிவபெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.
இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவாரத்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும். இல்லையெனில் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில்தான். அவன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
விரதம் இருக்கும் முறை :
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.
கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.