அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்திருந்தாலும் கூட அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரின் சாதனையையும் ஹிலாரி கிளிண்டன் முறியடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் தோல்வியுற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
டிரம்பின் வெற்றிக்கு பல்வேறு காரணம் கூறப்பட்டாலும் கூட தேர்தலில் தோல்வி அடைந்த ஹிலாரி முந்தைய ஜனாதிபதிகளின் சாதனைகளை அனைத்தையும் முறியடித்து ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பெற்ற வாக்குகள் 61.6 மில்லியன் ஆகும். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த ஹிலாரி பெற்ற வாக்குகள் 63 மில்லியன் ஆகும்.
முன்னதாக, தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு தேர்தலில் 69.5 மில்லியன் வாக்குகளும், 2012ம் ஆண்டு தேர்தலில் 65.9 மில்லியன் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
ஆனால், ஒபாமாவை தவிர இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த ஒட்டுமொத்த ஆண்களின் வாக்குகளை பின்னால் தள்ளிவிட்டு ஹிலாரி கிளிண்டன் இரண்டாம் இடத்தை பிடித்து ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.