வவுனியாவில் வெளிநாட்டு அகதிகளை தங்க வைக்கும் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக, அகதிகள் குழுவொன்று இன்று அழைத்து வரப்படவுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 80 அகதிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றன.
இந்த அகதிகளை இன்று வியாழக்கிழமை (30) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அவர்கள் சில தினங்களில் தங்களது சொந்த நாடுகளுக்கு அல்லது வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே மீண்டும் 80 அகதிகளை அங்கு தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வெளிநாட்டு அகதிகளை யாழ்ப்பாணத்தில் தனியார் வீடுகளில் தங்க வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.