உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாடு சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் இன்று தொடங்கியது. நாளைவரை நடைபெறும் இந்த மாநாட்டில் தங்களுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
இதற்கிடையில், சவுதி அரேபியா அரசின் தொலைக்காட்சியில் நேற்று அந்நாட்டு மக்களிடையே தோன்றி உரையாற்றிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத், ‘சுமார் 50 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஆதரித்துவரும் ஈரான் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
பலநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை எல்லாம் மீறியவகையில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த துடிக்கும் ஈரான் அரசு கடல் பிராந்தியத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரான் அரசை கண்டித்து அதன் செயல்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பை சர்வதேச சமுதாயம் ஏற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் பாரசீக வளைகுடா கடல் பகுதி வழியாக சென்ற சவுதி அரேபியா நாட்டு பெட்ரோலிய கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா அரசு குற்றம்சாட்டி இருந்தது நினைவிருக்கலாம்.
சவுதி மன்னரின் தற்போதைய குற்றச்சாட்டுக்கும் பழைய பதிலையே தெரிவித்துள்ள ஈரான் அரசு இஸ்லாமிய நாடுகள் கூட்டுறவு உச்சி மாநாட்டிலும் தங்கள் நாட்டின்மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைக்க சவுதி அரேபியா அரசு முயற்சிப்பதாக கூறியுள்ளது.