நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் அவசியமாகும். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், வாசனையோடும் இருப்போம். இவை அனைத்துமே உண்மைதான் ஆனால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல்ரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் காலை குளிப்பதை விட இரவில் குளிப்பது ஏன் நல்லது என்று பார்க்கலாம்.
முகப்பருக்கள் வரலாம்
நாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்பசையுடன் அப்படியே சென்று தூங்கும்போது அது உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம். இரவு தூங்கும்முன் ஜிங்க் சோப்பை கொண்டு உடலை சுத்தம் செய்வது உங்கள் முகப்பருக்களில் இருந்து பாதுகாக்கும். இரவில் குளித்தவுடன் விரைவில் தூங்கி விடுவது நல்லது.
பருவகால அலர்ஜிகளை எதிர்க்கும்
உங்களுக்கு பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்கள் இல்லத்திற்கே வரக்கூடும். இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அலர்ஜியின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இது தூக்க பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
நிவாரணத்தை ஊக்குவிக்கிறது
அறிவியலின் அடிப்படையில் மிதமான வெப்பம் டென்ஷன் மற்றும் பதட்டத்தை தடுக்கும், மேலும் உடலுக்கு நல்ல நிவாரணத்தையும் வழங்கும். மேலும் இது உடல் அளவையும் தாண்டி உளவியல்ரீதியாக வும் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு மருந்தாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்கும் போது உங்கள் தூக்கத்தின் தரம் பலமடங்கு அதிகரிக்கும்.
ஆரோக்கியமான சருமம்
உங்கள் சருமம் சீராக இருக்க வளர்ச்சிஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் உடலுறவில் ஈடுபடும் போது வெளிப்படும் ஹார்மோனும் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தியும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே இரவு நேரத்தில் குளிப்பது உங்கள் உடலின் மேற்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களை சுத்தம் செய்வதன் மூலம் ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைக்கிறது. மேலும் இரவு நேர குளியல் உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும்.
தலையணை கிருமிகள்
உங்கள் தலையில் நிறைய பாக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும். இரவு தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் அப்படியே படுக்கும்போது இந்த பாக்டீரியாக்கள் உங்கள் தலையணைக்கும் பரவும். இதை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யும்போது அது உங்கள் முகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கும். நமது தலைமுடியானது பல பாக்டீரியாக்களை சேர்த்து வைத்து கொள்ளும். எனவே தூங்கும்முன் அதனை சுத்தம் செய்துகொண்டு தூங்குவதுதான் நல்லது. தினமும் இல்லாவிட்டலும் வாரத்திற்கு இரு முறையாவது தூங்கும்முன் தலையை சுத்தம் செய்ய வேண்டும்.
முடி ஆரோக்கியம்
இரவில் குளிப்பதால் அதிக பலனடைவது உங்கள் முடிதான். இது உங்கள் முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இரவு தலைக்கு குளித்து விட்டு காலையில் எழுந்தால் உங்கள் முடி மிருதுவாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்குவது உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.