அதிகாரத்தை கொண்டு தமிழர்களை அடக்கினார் மகிந்த ராஜபக்ச மௌனத்தினால் மற்றவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்து தமிழர்களை அடக்குவதற்கு அனுமதிக்கின்றார் மைத்திரியும் ரணிலும்
இங்கு தேரரை மகிந்தவாகவும் கிராமசேவையாளரை மைத்திரியும் ரணிலுமாக சித்தரிக்கிறார் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் இனவாத கருத்துக்கள் குறித்தும் கிராமசேவையாளருக்கு விகாராதிபதி பேசிய வார்த்தைகள் குறித்தும் அவர் எழுதி வெளியிட்டுள்ள தொகுப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்
அதன் முழுவிபரம் கீழே
மட்டக்களப்பு மாவட்டத்தில், கிராமசேவகரான தமிழர் ஒருவரை அருவருப்பான வார்த்தைகளால் சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் தாளித்து எடுப்பதும், ‘தமிழனெல்லாம் புலிதான்…. அடித்தே கொன்று விடுவேன்’ என்று மிரட்டுவதும்தான் இந்த வாரத்தின் பரபரப்புக் காணொளி.
வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது அது.
அந்த பிக்குவின் பெயர், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர். மங்களராமய – என்கிற பௌத்த விகாரையின் அதிபதி.
சிங்களவர்கள் சிலருக்கு எதிரான வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறாராம் அந்த கிராம சேவகர். அதற்காகத்தான் அவர் மீது பாய்ந்திருக்கிறார் தேரர்.
அவர் ஆத்திரம் பொங்கப் பேசுவது காணொளியில் முழுமையாகப் பதிவாகியிருக்கிறது.
தேரர் என்ன பேசுகிறார் என்பதை (அவர் சரமாரியாகப் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்து) கொழும்பு பத்திரிகைகள் வார்த்தைக்கு வார்த்தை வெளியிட்டிருக்கின்றன.
“வில்பத்துல வெட்டுறாங்கள்… அங்க போய் வழக்கு போடுடா….தமிழனெல்லாம் புலிடா… புலி தான்டா…இந்த நாய்தான் தொடர்ந்து வழக்குப் போட்டது….தமிழ்நாயே…. உன்னைக் கொல்லுவேன்….உன்னைப் பார்த்தா எனக்கு இரத்தம் கொதிக்குதுடா…சிங்களவனுக்கு எதிராக வழக்குப் போடுறதை நிறுத்துடா….ஒரு சிங்களவனை இங்கேயிருந்து அசைச்சாலும் உன் தாடையை அடிச்சி நொறுக்கிடுவேன்…நீ சாகும் வரைக்கும் அடிப்பேன்….”காவி உடை அணிந்திருக்கிற அந்த பௌத்த தேரர்,
புத்தரின் அன்பு நெறிகளிலிருந்து ஒரு மில்லி மீட்டர் கூட விலகாமல், கண்ணியத்தோடு பேசியிருக்கிற வார்த்தைகள் இவை.
சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக அந்த கிராமசேவகர் வழக்கு பதிவு செய்ததாலேயே இப்படியெல்லாம் அன்பொழுகப் பேசியிருக்கிறார் தேரர்.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பட்டிப்பளையில் இருக்கும் கச்சைக்கொடி கிராமத்தில் சட்ட விரோதமாக ஒரு சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது.
அதைத் தடுக்கச் சென்றிருந்த பிரதேசச் செயலாளர், காணி அதிகாரி ஆகியோருடன் அந்த கிராம சேவகர் சென்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு முன், மட்டக்களப்பு பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ இதே தேரர் முயன்றதையும், தமிழ் மக்கள் திரண்டு அந்த முயற்சியை முறியடித்ததையும் யோகேஸ்வரன் இப்போது நினைவுபடுத்தியிருக்கிறார்.
(சந்தியின் பெயரே பிள்ளையாரடி சந்தி…. அந்தச் சந்தியில் புத்தபிரானுக்கு என்ன வேலை?) அன்பையும் அகிம்சையையும் போதித்த புத்தரின் சிலைகள் மூலம், வெறுப்பையும் விரோதத்தையும் விதைக்கும் வேலையில் தேரர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இந்தச் செய்திக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா இல்லையா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால், இந்தச் செய்தி தொடர்பான (சிங்கள) வாசகர்களின் பின்னூட்டம், உண்மையிலேயே வியக்க வைத்தது.
இப்படிப்பட்டவர்களையெல்லாம் தேரராக ஏற்பதால்தான் பௌத்தம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது….இத்தகைய தேரர்களை விகாரைகளிலிருந்து விரட்டினால்தான் பௌத்தத்தைக் காப்பாற்ற முடியும்…இரண்டு சமூகங்களுக்கும் இடையே சுவர் எழுப்பிவிட்டுத்தான் இவர்கள் ஓய்வார்கள் போலிருக்கிறது….பௌத்தர்களை மட்டுமின்றி, பௌத்த சங்கத்தையும் தேரர் தலைகுனிய வைத்துவிட்டார்…..இலங்கையில், ஒழுங்கு கட்டுப்பாடு என்பது மருந்துக்குக் கூட இல்லாத அமைப்பாக சங்கம் மாறிவிட்டது….என்று ஆளாளுக்கு தேரரின் நடவடிக்கையையும் பௌத்த மத அமைப்புகளின் பொறுப்பின்மையையும் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
‘எல்லா மதங்களிலும் இறைப்பணியில் ஈடுபடுவோர் மதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இலங்கையில் மட்டும்தான், ஒரு பொறுக்கியோ ரவுடியோ குற்றவாளியோ காவியுடை அணிந்ததும் கடவுளாகவே ஆகிவிடுகிறான்…. மக்கள் அவன் காலில் விழுந்து வணங்குகின்றனர்….. மூட நம்பிக்கைகளிலேயே மூழ்கியிருக்கும் இந்த சமூகம் எப்படி உருப்பட முடியும்’ என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிற கேள்வி,
இலங்கையின் கண்மூடித்தனமான மதவெறியைச் சாடுவதாக இருக்கிறது.“சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிற தென்னிலங்கையில், ஒரு சிங்கள கிராம சேவகரை தமிழர் ஒருவர் இப்படியெல்லாம் மிரட்டியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா’ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஒரு வாசகர்.
இலங்கையில், சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை என்கிற யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது அது.புத்த பிக்குகளைக் கண்டு அதிபர் மைத்திரிபாலா அஞ்சி நடுங்குவதாகச் சொல்கிறார் இன்னொரு வாசகர்.
பௌத்த பீடங்களில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர அதற்கான அமைச்சகம் முயற்சி செய்தாலும், அதிபர் குறுக்கே விழுந்து தடுப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார் அவர்.
‘சிங்கள பௌத்த சமூகம் உருப்பட வேண்டுமென்றால், அஞ்சி நடுங்காமல் துணிந்து முடிவெடுக்கிற ஒரு உறுதியான தலைவர் தேவை’ என்கிறார் அவர்.
அவரது விருப்பத்துக்கு நேர்மாறாக, சலூனுக்குப் போய் தலைமுடியை வழித்துவிட்டு பௌத்தப் பள்ளிக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறவர் யாராக இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே,
அவருக்கு மாதம் 2500 ரூபாய் மொய் எழுதிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் இப்படியெல்லாம் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் பேசியபோதும், அந்த கிராம சேவகர் நிதானம் இழக்காமல் பொறுமை காத்ததைப் பாராட்டியிருக்கிற ஒரு வாசகர்,
மிக மிக நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். ‘பௌத்த தேரரான நீங்கள் இப்படியெல்லாம் பேசலாமா’ என்று பணிவுடன் கேட்டாராம், அந்த கிராம சேவகர்.
‘இருவரது நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கிற எவரும், இருவரில் யார் தேரர் என்கிற குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்’ என்கிறார் அந்த வாசகர்.
அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் ஓர் அதிசயமோ ஆச்சரியமோ கிடையாது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிஜ முகங்களில் அவரும் ஒருவர். வரலாற்றைத் திரித்து, சிங்கள மேலாதிக்கத்தைத் திணிக்கிற மகாவம்ச மனோநிலையின் மற்றுமொரு அடையாளம்.
தமிழர் தாயகத்தில் இருக்கிற நமது உறவுகளுக்கு, இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை அளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. பௌத்த பிக்குகள் கொலைவெறியோடு ஆயுதமேந்தித் தெருவில் திரிந்ததை எல்லாம் பார்த்திருப்பவர்கள் அவர்கள்.
சம்பவம் நடந்த சமயத்தில், அம்பிட்டிய தேரர் என்ன மனநிலையில் இருந்தார் என்பது தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பதும் தெரியவில்லை.
ஆனால், தேரர் இப்படியெல்லாம் பேசும்போது, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிற உயர் அதிகாரிகளும் போலீசாரும் தெளிவான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
தேரரின் வார்த்தைகளைக் காட்டிலும், அவர்களது மௌனம்தான் கொடுமையானது.இந்த மௌனம், அவர்களுக்கு மைத்திரிபாலா சிறிசேனா கற்றுக் கொடுத்திருக்கிற மௌனம்.
‘கண்டும் காணாதது போல போய்க்கொண்டே இரு’ என்பதுதான் மைத்திரி – ரணில் கூட்டணியின் பால பாடம்.ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுக் கொன்று குவித்தது ராஜபக்ச அரசு.
இளைஞர்களை எப்படிக் கொல்ல வேண்டும், முதியவர்களை எப்படிக் கொல்லவேண்டும், குழந்தைகளை எப்படிக் கொல்ல வேண்டும், இளம்பெண்களை எப்படிக் கொல்ல வேண்டும் – என்றெல்லாம் வகைபிரித்து, வழிவகுத்துக் கொன்றது.
ராஜபக்ச மீதான தமிழர்களின் சீற்றம் குன்றாமல் குறையாமல் அப்படியே இருப்பதற்கு இதுதான் காரணம்.ராஜபக்ச மீதிருந்த கோபத்தில்தான், ராஜபக்சவை எதிர்த்த மைத்திரிக்கு வாக்களித்தார்கள் தமிழ் மக்கள். மைத்திரி அரசு ராஜபக்சவைக் கூண்டில் ஏற்றப்போவது உறுதி என்று நம்பினார்கள்.
அந்த நம்பிக்கை முழுமையாகப் பொய்த்துவிட்டது. இன்றுவரை அதற்காக ஒரு துரும்பைக்கூடத் தூக்கிவைக்கவில்லை மைத்திரியும் ரணிலும்!“விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவ வீரர்கள் மீது குற்றஞ்சுமத்திக் கூண்டில் நிறுத்தப் பார்க்கிறது மைத்திரி அரசு.
இராணுவ வீரர்களின் முதுகில் குத்த முயல்கிறார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது இராணுவத்தினரைக் காப்பாற்றுவேன். சிங்கள மக்களின் மானத்தைக் காக்க, மின்சார நாற்காலியில் கூட அமரத் தயார்” என்றெல்லாம் பேசி, சிங்களத் தேசிய வெறியை ஏகத்துக்கும் எகிறவைக்கிறது ராஜபக்ச மிருகம்.
நல்லிணக்கம், நீதி – என்றெல்லாம் பேசுகிற மைத்திரிபாலா, அதற்கெல்லாம் நேரெதிரான ராஜபக்சவின் இனவெறிப் பேச்சு காதிலேயே விழாத மாதிரி கள்ளமௌனம் சாதிக்கிறார். அம்பிட்டிய தேரர் வெறிபிடித்தைப் போல பேசுகிற போது, போலீசாரும் அதிகாரிகளும் சாதிக்கிறார்களே, அந்த மௌனமும் மைத்திரியின் மௌனமும் வேறு வேறல்ல.
இலங்கைக்கு வர நவநீதன்பிள்ளையால் முடியலாம், திரும்பிப் போக முடியுமா – என்று சிங்கள அரசியல் தலைவர்கள் திமிராகப் பேசியதும், ‘சர்வதேச pimp’ என்று பான்கீமூனுக்குப் பட்டம் சூட்டியதும் இப்போதுதான் நடந்ததைப் போலிருக்கிறது.
அம்பிட்டிய தேரர், இதைக்காட்டிலுமா அதிகமாகப் பேசிவிட்டார்?எழுக தமிழ் பேரணியின் வெற்றியால் ஏற்பட்ட எரிச்சலில், ‘அமிர்தலிங்கத்துக்கு நடந்தது போலவே விக்னேஸ்வரனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது’ என்று சரத் பொன்சேகா பகிரங்கமாக மிரட்டினாரே, அதைக்காட்டிலும் அதிகமாகவா மிரட்டிவிட்டார் அம்பிட்டிய!
லசந்த கொலைவழக்கிலும், பிரகீத் ஏக்னலிகோட காணாமல் போன வழக்கிலும் விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை விடுதலை செய்யும்படி நீதிமன்றத்தையே அச்சுறுத்தினாரே மைத்திரிபாலா, அந்த அளவுக்கா அச்சுறுத்திவிட்டார் அம்பிட்டிய?
ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் மற்றும் நீதி பரிபாலன நிறுவனங்களின் முகத்தில் சகட்டுமேனிக்கு சகதியைப் பூசுகிறார்கள் மைத்திரியும் ரணிலும்! ‘தைரியம் இருந்தால், இலங்கை இராணுவத்தின் மீது கை வைத்துப்பார்’ என்று சவால் விடுகிறார்கள்.
அவர்கள் செய்வதைத்தான், தன்னால் முடிகிற ஏரியாவில் செய்ய முயல்கிறார் அம்பிட்டிய. ‘இங்கேயிருந்து ஒரே ஒரு சிங்களவனை வெளியேற்றிப் பார்’ என்று சவால் விடுகிறார்.
என்ன வித்தியாசம் இருவருக்கும்?மைத்திரி, ரணில், சரத் பொன்சேகா, ராஜபக்ச, சந்திரிகா ஆகியோர் சிங்கள இலங்கைக்குத் தாங்களே தாதாவாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காகப் போட்டி போடுகிறார்கள்….
கோத்தாவின் பெயரும் அந்தப் பட்டியலில் இருக்கிறது. அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், தன்னடக்கத்தோடு தன்னுடைய ஏரியாவைத் தானே சுருக்கிக் கொள்கிறார்.
மட்டக்களப்பு ஏரியாவுக்கு மட்டுமே தாதாவாக இருந்தால் போதும் என்பது அவரது கணக்கு. ஆனைக்கு எதற்கு அம்பாரங்கணக்கு என்று தேரர் நினைக்கிறாரோ என்னவோ!மைத்திரி போன்றவர்களுக்கும் அம்பிட்டிய தேரருக்கும் ஏரியாதான் வித்தியாசம்.
மட்டக்களப்பு சர்வாதிகாரியாக மட்டுமே இருந்துகொண்டு, குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டப் பார்க்கிறார் தேரர். போக்கிரித்தனம் செய்கிறார் என்றோ, பொறுக்கித்தனமாக நடக்கிறார் என்றோ, பேட்டை ரவுடி மாதிரி பாய்கிறார் என்றோ அவர்மீது குற்றஞ்சுமத்தினால், தாதா பதவிக்கான போட்டியில் இருக்கிற மற்றவர்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டு பொருந்துமா பொருந்தாதா?என்னைப் பொறுத்தவரை, இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செய்வதையெல்லாம்கூட செய்தியாக்கிவிட வேண்டுமென்று நினைப்பதில்லை.
நம் கண்ணெதிரில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளுக்கு நீதிகேட்பதுதான் நமக்கிருக்கிற முதல் முக்கிய வேலை.என்றாலும் மகிந்த ராஜபக்ச மாதிரி ஒரு தேரர் கொலைவெறியுடன் பேசுவதிலும். சுற்றியிருக்கிற போலீசாரும் அதிகாரிகளும் மைத்திரி – ரணில் மாதிரி அதை வேடிக்கை பார்ப்பதிலும் இலங்கையின் கள்ளத்தனம் தெள்ளத்தெளிவாக அம்பலமாவதாலேயே இதை எழுதுகிறேன்.
‘தமிழனெல்லாம் புலி தான்’ என்கிற தேரரின் குற்றச்சாட்டு மட்டுமே இந்த விஷயத்தில் நமக்குக் கிடைத்திருக்கிற ஒரே ஆறுதல். தமிழினம் மானத்தோடும் வீரத்தோடும் வாழ்கிற இனம் என்று, அறிந்தோ அறியாமலோ, நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார் தேரர்.
இந்த நற்சான்றிதழை ஃபிரேம் போட்டு வீட்டில் மாட்டிக் கொள்வதைக் காட்டிலும், அந்தப் பெருமைமிக்க அடையாளத்துக்குத் தகுந்தவர்களாக நம்மை மாற்றிக்கொள்வதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் நான்.