சீனாவின் பாரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவி தொடர்பிலான விவகாரத்தில் கனடா அமெரிக்காவுக்கு உதவுமானால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரும் என சீனா எச்சரித்துள்ளது.
கனேடியர்கள் இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இருவரையும் சீனா விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பேன்சும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளதனை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
ஹூவாவி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அந்த நிறுவனத்தின் உயர்நிலை நிதி அதிகாரியை கனடா கைது செய்ததை அடுத்து, அதற்கு பதில் நடவடிக்கையாக இரண்டு கனேடியர்களை சீனா தனது நாட்டில் வைத்து கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து சீனாவின் குறித்த இந்தக் கைது நடவடிக்கையை தன்னிச்சையான செயல் என்று கண்டனம் வெளியிட்ட கனடா, அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறான நிலையிலேயே, இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கு உதவுவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கனடா தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புவதாகவும், எனவே இந்த தவறைச் சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கையை கனடா மேற்கொள்ள வேண்டும் என்றும் சீன் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.