‘பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி.
வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில் வசிக்கும் ரேவதிக்கு இப்பொழுது 31 வயது. தனது இரண்டாவது மகள் இன்னும் திருமணம் முடிக்காமலிருப்பது அவருக்கு பெரும் பதைபதைப்பை கொடுக்கிறதென்பதை அவருடன் பேசும்போது புரிந்து கொண்டோம். 31 வயதிலேயே பேரக் குழந்தையை கண்டுவிட்டவர் ரேவதி.
அவரது மூத்த மகள்- தற்போது திருமணத்திற்கு காத்திருப்பவளின் அக்கா- தற்போது ஒன்றரை வயது குழந்தையின் தாய். ரேவதியின் மூத்த குழந்தைக்கு வயது 16.
இந்த அதிர்ச்சி கதையை வாகரைக்கு செல்வதற்கு முன்னரே அறிந்து விட்டோம். மட்டக்களப்பின் மீள்குடியேற்ற பிரதேசங்களில் தலைவிரித்துள்ள பெரும் சமூகக்கொடுமையான இளவயது திருமணங்கள் பற்றிய அதிர்ச்சிகதைகளை அறிந்ததன் பின்னர் அந்த பகுதிகளிற்கு சென்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தநடவடிக்கைகளில் சிக்கி 2006 இல் இடம்பெயர்ந்து 2007 இல் மீள்குடியேறிய வவுணதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, கிரான், செங்கலடி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் சிறுவயது திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன.
இந்தப்பகுதிகளில் 14- 17 வயதிற்குள் சிறுமிகள் திருமணம் செய்து குழந்தை பிரசவிப்பது சர்வ சாதாரண விடயம் என்கிறார்கள் அதிகாரிகள்.
யுத்த நெருக்கடி, கல்வியறிவின்மை உள்ளிட்ட பலவற்றை இதற்கு காரணங்களாக சொல்கிறார்கள். யுத்தகாலத்தில் இந்தப் போக்கு சற்று எல்லை மீறியது என்பது அதிகாரிகளின் கருத்து.
தங்கள் பிள்ளைகள் ஆயுத மோதல்களிற்குள் சிக்கிவிடக் கூடாதென்பதற்காக இளவயது திருமணத்தை பெற்றோர் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். பராயமடைந்ததுமே சிறுமிகளை யாருக்காவது திருமணம் செய்து வைத்துள்ளனர். அது தவிர வறுமையும் இதற்கு காரணங்களிலொன்றாகியுள்ளது.
யுத்தத்தில் சிக்கி கணிசமான ஆண்கள் இந்தப்பகுதிகளிலும் இறந்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய சிறுமிகள் வறுமை காரணமாக இளவயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப்பகுதி கிராமசேவகர் ஒருவர் கூறினார்.
பல்வேறு காரணங்களினால் நடந்த இளவயது திருமணங்கள் இப்பொழுது சம்பிரதாயமாகிவிடும் அபாயத்தையும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இளவயது திருமணம் என்றாலே அதில் நிறைய சிக்கல்கள் இருக்கும் என்பது புரியக்கூடியதுதான். இந்தப்பகுதிகளில் உள்ள பிரதான சிக்கல் இளவயது திருமணம் இளவயது விதவைகளை உருவாகுவதுதான்.
சராசரியாக 15,16 வயது சிறுமிகளை 20-22 வயது வாலிபர்களிற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்கள் சில மாதங்கள் ஒன்றாக இருந்து சிறுமிகள் கர்ப்பவதியாகும் சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளிற்கு தொழில் தேடி செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தில் செல்கிறார்கள். சிலர் முன் பின்னாக திரும்பி வருவதுண்டு.
மத்திய கிழக்கிலிருந்து அவன் திரும்பி வந்ததன் பின்னர் பெரும்பாலானவர்கள் தமது மனைவிகளுடன் வாழ்வதில்லை. இதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள்.
1, கணவன் வெளிநாட்டிலிருந்த சமயத்தில் மனைவியைப் பற்றி ஊரில் பரவும் தகவல்.
2, வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்கள் அப்பாவிகளான கிராமத்து சிறுமிகளுடன் வாழ விரும்புவதில்லை.
இந்த சமயத்தில்த்தான் அந்தச் சிறுபெண்கள் பெரும் விலை கொடுக்கிறார்கள். இரண்டோ மூன்று வயதில் கையில் ஒரு குழந்தையிருக்கும். அப்பொழுதுதான் 18 வயதை எட்டிப்பிடித்திருப்பார்கள். சட்டப்படி பெண்கள் திருமண வயதையடையும் சமயத்தில் இவர்கள் கணவனை பிரிந்தவர்களாகிறார்கள்.
கணவனால் கைவிடப்பட்ட இந்தப் பெண்களிற்கு சட்டத்தில் எந்த கருணையும் கிடையாது. ஏனெனில் பதினெட்டு வயதின் முன்பாக சட்டபூர்வமற்ற திருமணங்களைத்தான் இவர்கள் செய்திருந்தார்கள். தெய்வத்தையும் ஊர் பெரியவர்களையும் சாட்சி வைத்து நடந்த திருமணங்களிற்கு சட்டபூர்வ விவாகரத்து எப்படி கிடைக்கும்?
இதுதவிர முறையற்ற உறவுகளும் பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. சிறுமிகளை திருமணம் செய்யும் வாலிபர்கள் பெரும்பாலானவர்கள் அந்த சிறுமியுடன் நீண்டகாலம் வாழ்வதில்லை.
வேறொரு துணையை நாடுகிறான். இளவயதில் கணவனை பிரிந்த பெண்கள் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நெருக்கடிகள் நேரும்போது முறையற்ற வேறு உறவுகளை ஏற்படுத்துவதும் நிகழ்கிறது.
இளவயது திருமணங்களிற்கு முக்கிய காரணமாக அரசசார்பற்ற தொண்டு நிறுவன பிரதிநிதியொருவர் குறிப்பிட்டது, உயர் வகுப்பு பாடசாலைகள் குறைவாக காணப்படுவதையே.
பாடசாலை பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். எட்டு, ஒன்பதாம் வகுப்பின் பின்னர் படிப்பதாயின் அதிக தூரம் பயணிக்க வேண்டும். அதற்கான பொருளாதார வசதியில்லாததால் பலரும் வீட்டிலிருக்கிறார்கள். அப்பொழுதுதான் திருமணம் செய்கிறார்கள்’ என்றார்.
மட்டக்களப்பின் பெரும் சமூக அவலமாக மாறிவிட்ட இளவயது திருமணங்களை தடுப்பதுதான் ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கு அத்தியாவசியமானது.
-மட்டுமைந்தன்-