மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அவரது உறவினர்களிடம் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த அருண்பிரசாத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்தார்.
இதனையடுத்து அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மேலதிக சிசிச்சைக்காக உலங்கு விமானத்தின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு 47 நாட்களாக தொடர்ச்சியாக சிசிச்சையளிக்கப்பட்ட நிலையில், அங்கும் சிகிச்சை பலனளிக்காது இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு இருதயபுரத்தினைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞரான செ.அருண்பிரசாத் (வயது-30) எனும் வெல்டிங் கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரபல நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்ததுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிக்சைப்பெற்று வருகின்றனர். எனினும் சிகிச்சை பலனளிக்காது மேலும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.