சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜவர்த்தனவை நியமிக்கும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால நிராகரித்துள்ளார். ருவன் பலவீனமானவர் என்பதால் அவருக்கு சட்டம், ஒழுங்கை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஒரு குழுவினர், ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளனர்.
இதன்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சை தருமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஜனாதிபதி நிராகரித்ததும், சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சரை நியமிக்கும்படி கோரினர்.
இதற்கு ஜனாதிபதி இணங்கியபோது, ருவன் விஜயவர்த்தனவின் பெயரை பிரதமர் பரிந்துரைத்துள்ளார். எனினும், ஜனாதிபதி அதை நிராகரித்து விட்டார். நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தபோதும், ஜனாதிபதி இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
“நீங்கள் (ஐ.தே.மு) இப்பொழுது செய்ய வேண்டியது அரசியல் வேலைத்திட்டங்களே தவிர, சட்டம் ஒழுங்கு அமைச்சை கோருவதல்ல. மஹிந்த அணியினர் அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.
சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என்பதால், சிங்கள பௌத்த வாக்குகளை முழுமையாக பெற முயல்கிறார்கள். இதனால்தான் முஸ்லிம் மக்களின் மீதான வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த அணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள்.
நீங்கள் அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை செய்யுங்கள். சட்டம் ஒழுங்கு அமைச்சை கோருவதல்ல நீங்கள் இப்போது செய்ய வேண்டியது. சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சை வழங்க தயாராக இருக்கிறேன்.
ஆனால் ருவன் விஜயவர்த்தனவிடம் அதை வழங்க முடியாது. அவர் பலவீனமானவர். பலமான ஒருவரை சிபாரிசு செய்தால் வழங்குவேன்“ என்று தெரிவித்துள்ளார்