ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரமராக பதவிப்பிரமாணம் செய்த நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முதலாவது அரச முறை சுற்றுப்பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்திய பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருநாட்டு அரச தலைவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியால் இந்திய பிரதமருக்கு விசேட மதிய உணவு விருந்துபசாரமொன்றை வழங்குவதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி இரண்டாம் தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனேயே தனது முதலாவது இராஜதந்திர சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கான இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலின் பின்னர் இலங்கையில் அரச முறை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் இவராவார்.
இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி அனைத்து துறைகளிலும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இந்திய பிரதமரின் சுற்றுப்பயணம் உறுதுணையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.