பிரம்மனும் சரஸ்வதியும் :
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கண்டியூர் திருத்தலம். இங்கு மூலவரான சிவபெருமானுக்கு ‘பிரம்ம சிரக்கண்டீஸ்வரர்’ என்று பெயர். பிரம்மனின் தலையைக் கொய்து அவரது ஆணவத்தை அடக்கியவர் என்பதால், இறைவனுக்கு இப்பெயர் வந்துள்ளது. இங்கே வந்து பரிகாரங்கள் செய்து கொண்டால் முன்வினை அகலும், எல்லா தோஷங் களும் நீங்கும். காரியத் தடை விலகும் என்பது நம்பிக்கை. இந்த தலத்தில் பிரம்மாவின் அருகில் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பது கூடுதல் பலன் தருவதாகும். இங்குள்ள அம்பாளின் திருநாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும்.
லிங்க வடிவில் பெருமாள் :
மகாவிஷ்ணு பல ஆலயங்களில் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அதே போல நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலங்களிலும் கூட பல ஆலயங்களில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார். ஆனால் கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காரமடையில் உள்ள பெருமாள் வித்தியாசமான தோற்றத்தில் அருள்புரிகிறார். இங்கு கோவில் கொண்டுள்ள அரங்கநாதர், லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கிய இவரது உருவத்தில் வாள் பட்ட வடு காணப்படுகிறது.
வாமதேவம் :
ஒரு முறை பிரம்மதேவன் வடக்கு திசை நோக்கி சிவபெருமானை வேண்டி தவம் செய்தார். அப்போது பிரம்மனுக்கு காட்சிகொடுக்க நினைத்த சிவபெருமான், சிவந்த நிற மேனியனாய் பிரம்மாவின் முன்பு தோன்றினார். இறைவன் தனது உடலில் பாம்பை அணிகலனாக அணிந்து கொண்டிருந்தார். மானும், மழுவும் கைகளில் ஏந்தியிருந்தார். அந்தத் திருக்கோலத்தில் காட்சியளித்த முகமே வாமதேவம் எனப்படுகிறது.
தத்புருஷம் :
பிரம்மதேவன் கிழக்கு திசை நோக்கி சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். இப்போது இறைவன் தங்க நிறத்துடன் பிறையை நெற்றியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் என்று கூறப்படுகிறது. பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உள்ளம் மகிழ்ந்து, தனது அழகிய உருவத்தில் இருந்து, காயத்ரி தேவியை உண்டாக்கி பிரம்மதேவனிடம் அளித்தார். காயத்ரியை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது என்றும் வரமளித்தார்.
ஈசானம் :
கடைசியாக பிரம்மதேவன் ஆகாயத்தினை நோக்கியபடி சிவபெருமானை நினைத்து தவம் செய்தார். இப்போது இறைவன், சாம்பல் வண்ண நிறத்துடன், முக்கண் கொண்டவராகவும், இளமதியை தலையில் சூடியவராகவும், கோரைப் பற்கள் கொண்ட உருவமாகவும் இரண்டு பெண்களுடன் காட்சியளித்தார். இறைவனின் இந்த முகமே ஈசானம் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
சுந்தர தாண்டவம் :
வயலூர் முருகப்பெருமான் ஆலயத்தில் உள்ள சுந்தர தாண்டவ மூர்த்தியின் திருவடிவம் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக் கிறது. பொதுவாக நடராஜர் வடிவமானது, சடைமுடி, திருவாசி, காலின் கீழே முயலகன் போன்றவை இருக்கும். ஆனால் இந்த சுந்தர தாண்டவ மூர்த்தியின் வடிவத்தில், திருவாசி இல்லை. காலின் கீழே முயலகனும் இல்லை. தலையில் சடைமுடியும் காணப்படவில்லை. ஆகையால் தாண்டவ மூர்த்திகளிலேயே இது ஒரு அபூர்வமான கோலமாக பார்க்கப்படுகிறது.
ஈசனுக்கு பிடித்த மலர்கள் :
பொதுவாக சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படும். அவருக்குப் பிடித்தது, மூவிலைகளால் ஆன வில்வ இலைதான். இது தவிர சிவபெருமான் விரும்பும் மலர்களாக சில குறிப்பிடப்படுகின்றன. சிவாலயத்தில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அந்த மலர்கள், கொன்னை, வன்னி, எருக்கு, ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, செங்கழுநீர், தும்பை போன்றவையாகும். இந்த மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
கடவுள்களின் வித்தியசமான திருக்கோலங்கள்
Loading...
Loading...
Loading...