அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை உடலையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்தவே பயன்படுத்துகிறோம். இந்நிலையில் உடலில் இயற்கையாக இல்லாத எல்லா பொருட்களையும் இது வெளியேற்றும் என்பதால் அகத்திக் கீரையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
இதனாலேயே மருந்துகளை உட்கொள்ளும் காலங்களில் இதை சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம். தவிர வாயுவை உண்டுபண்ணும் தன்மையும் அகத்திக்கீரைக்கு உண்டு. என்றாலும் இதில் 63 விதமான சத்துக்கள் இருப்பதால் பத்தியம் முறிக்கும் போது சுண்டைக்காயோடு சேர்த்து அகத்தியை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது. சுண்டைக் காயையும், அகத்தியையும் சேர்த்து உண்ணும் போது உடலுக்கு பத்தியம் / விரதத்துக்குப் பின் நமக்கு தேவையான அனைத்து விதமான விரதம் / பத்தியத்தால் இழந்த சத்துக்களும் திரும்பக் கிடைக்கும் என்கிறது நம் தமிழ் மருத்துவ முறை.
சரியான ஆரோக்கியம் தரும் உணவு, ஊட்டத்தை அளிப்பதுடன் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். இதுவே நாம் நம் கையால் உணவை உற்பத்தி செய்ய முக்கிய காரணம். எனவே, சரியான உணவு ஊட்டத்தை தருவதோடு உடல் நலத்தையும் எப்படி பாதுகாக்கிறது… கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது… என்று தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் நாம் சரியான உணவை எடுத்துக் கொள்ளவும், உணவு முறையை வகுத்துக் கொள்ளவும் முடியும். வைட்டமின்கள் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு அவை உடல் கழிவுகளை வெளியேற்றவும் அவசியம்.
வைட்டமின் A, C மற்றும் E, நம் உடலிலுள்ள ‘free radicals’ஐ குறைக்கவும், நீக்கவும் செய்கின்றன. ‘ஃப்ரீ ரேடிகல்ஸ் என்பவை நம் உடலில் அன்றாடம் நடைபெறும் உயிர்வேதி வினைகளால் உண்டாகக் கூடியவை. இவை அதிகமாகும்போது உடலில் பலவிதமான உபாதைகள் உருவாகும். முக்கியமாக இவை உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள திசுக்களையும் அங்கங்களையும் கெடுக்கவும், அழிக்கவும் கூடியவை.
நமது டிஎன்ஏவை மாற்றும் தன்மையும் இதற்கு உண்டு. அவ்வளவு ஏன்… ‘Oxidative Stress’ என்று சொல்லக்கூடிய ஒரு நிலையையும் கொண்டு வரும். உடல் பாகங்கள் துருப்பிடிக்க ஆரம்பிக்கின்றன என இதைப் புரிந்துகொள்ளலாம். இந்த நிலை புற்று நோய்; Alzeimer’s, Dementia போன்ற மூளை செயல்பாட்டின் குறைகள்; மாரடைப்பு, Arthritis, நீரழிவு தீவிரமாதல்… என பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
சரி. ஆபத்தான அளவுக்கு ‘free radicals’ எப்படி உற்பத்தி ஆகின்றன?
* நாம் உண்ணும் உணவுகள் – தவறான எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகள், பூச்சிக் கொல்லி கள் உள்ள காய்கறிகள், பழங்கள், மாசடைந்த நீரில் விளைந்த மீன் போன்ற கடல் உணவுகள்.
* மாசடைந்த காற்றை சுவாசித்தல்.
* சுற்றுச்சூழல் கேடால் மாசடைந்த நீரை உட்கொள்ளல்.
* புகை மற்றும் மதுப் பழக்கம்.
* உடலுக்குத் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத சூழலில் வாழ்தல்.
உண்மையில் நம் உடலே சில சமயங்களில் ‘free radicals’ ஐ உற்பத்தி செய்யும். ஆனால் அது தேவையான அளவுக்கு மட்டும் – தேவையில்லாத கிருமிகளையும், சில வேதிப் பொருட்களையும் சமன் செய்வதற்காக – உற்பத்தி செய்யும். ஆனால், மேற்கண்ட காரணங்களால் உற்பத்தி ஆகும் ‘free radicals’இன் அளவு அதிகமாவதால் நமக்கு பாதிப்புகள் உண்டாகின்றன.
எப்படி இந்த ‘free radicals’ ஐ குறைப்பது, அழிப்பது?
நாம் உண்ணும் காய்கறி, பழங்கள், மீன் இவைகளில் ஃப்ரீ ரேடிகல்ஸை குறைக்கவும், அழிக்கவும் தேவையான ‘ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்’ (Anti- Oxidants) இயற்கையாக நிறைந்திருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. இதைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். இப்போது கீரை வளர்ப்பை தொடருவோம்.
கொடிப் பசலி / பசலை:
இது எளிதில் வளரக்கூடியது. மிகவும் நுண்ணூட்டங்களைக் கொண்டது. நிறைய சத்துக்களை உள்ளடக்கியது. சுவையானது. செலவே இல்லாமல் வளரக் கூடியது. இதை எப்படி நாம் மறந்துபோனோம்? ஏன் இந்தக் கீரை சந்தையில் கிடைப்பதில்லை (ஆனால் கேரளாவில் பரவலாக கிடைக்கிறது) என்பது புரியாத புதிர். ஒரு சிலர் வீட்டு வாசலில் அழகுக்காக வளர்க்கிறார்கள். ஆனால், உண்பதில்லை.
இதற்கு விதை இருந்தாலும் தண்டின் மூலமாக வளர்ப்பதே எளிது. நர்சரிகளிலிருந்தோ, தெரிந்தவர்கள் வளர்த்தால் அவர்களிடமிருந்து சிறிய ஒரு துண்டை கொண்டு வந்தோ வளர்க்கலாம். ஒரு கணுவாவது மண்ணுக்குள் இருக்கும்படி நட வேண்டும். இதில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் இருக்கின்றன. இரண்டுமே உண்ணக்கூடியவைதான். ஒரே குணங்கள் கொண்டவைதான். ஒரு கொடி ஐந்து குடும்பங்களுக்குப் போதுமானது.
அரைக்கீரை, சிறுகீரை, கொத்து பசலி (பாலக்):
இந்தக் கீரைகளை அகலமான ஆழம் குறைவான தொட்டிகளில் வளர்க்கலாம். இதன் வேர்கள் குறுகிய ஆழமே செல்லும் என்பதால் உயரமான தொட்டிகள் தேவையில்லை. இதற்கான விதைகள் நர்சரிகளிலும், விதைக் கடைகளிலும் கிடைக்கும். இவை மூன்றையும் விதைகளிலிருந்து வளர்ப்பதே எளிது. என்றாலும் அரைக் கீரையை தண்டின் மூலமாகவும் வளர்க்கலாம். இதில் சிறு கீரையை மட்டும் வளர்ந்தவுடன் வேருடன் அறுவடை செய்ய வேண்டும். அ(று)ரைக் கீரையையும் பாலக் கீரையையும் பலமுறை வேரில்லாமல் அறுத்து பயன்படுத்தலாம். முதலில் விதையை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பிறகு தொட்டியில் இட்டு மண் தூவி, தினமும் நீர் விட வேண்டும். நாற்று நன்றாக வந்தவுடன் வேறு தொட்டிக்கு மாற்றலாம் அல்லது அடர்த்தியான் பகுதி களிலிருந்து சில நாற்றுகளை நீக்கி விடலாம். 35 – 40 நாட்களில் அறுவடை செய்யலாம். பொதுவாக நகரப்பகுதிகளில் வளர்க்கும் போது பூச்சி தாக்குதல்களுக்கு வாய்ப்பேதுமில்லை. தொட்டி மண் சத்துள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். கடலை மற்றும் புண்ணாக்குகளை மண்ணில் கலப்பது நல்லது. இந்தக் கீரைகளை இலை உண்ணும் பூச்சிகள் தாக்கலாம். அதிகமான தாக்குதல் என்றால் இலைகளில் சாம்பல் அல்லது சமையல் சோடா கரைசலைத் தெளிக்கலாம். வேறு எந்த பூச்சிக் கொல்லி மருந்தையும் தெளிக்க வேண்டாம்.
தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணி:
இந்தக் கீரைகளுக்கு கொஞ்சம் ஆழமான தொட்டிகள் தேவைப்படும். இவைகளும் விதை மூலமாகவே வளர்க்கப்படுகின்றன. பயிர் பாதுகாப்பும், மண் தரமும் மேலே சொன்னபடி இருக்க வேண்டும். இந்த மூன்று கீரைகளுமே வேர் இல்லாமல் அறுவடை செய்யவேண்டியவை. பல முறை அறுவடை செய்து பிறகு செடியை மாற்றிக்கொள்ளலாம்.