கனடாவுக்கும், பிலிப்பைன்ஸ்ற்கும் இடையிலான மோதல் தற்போது சுமூகமான நிலையை எட்டியுள்ள நிலையில், கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவிற்கான பயணங்கள் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்து விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக, பிலிப்பைன் அரசு தலைவர் ரொட்றிகோ டுரேட்டோவின் நிறைவேற்றுச் செயலாளர சால்வடார் மெடியேல்டிடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்மைகய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
2013 – 2014ஆம் ஆண்டுப் பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் என்று பெயரிடப்பட்டு, 69 கொள்கலன்கள் கப்பல் மூலம் பிலிப்பீன்சைச் சென்றடைந்த நிலையில், அவை கனேடிய குப்பைத் தொட்டிகளில் இருந்துவரும் குப்பைகள் என்று பிலிப்பைன்ஸ் சுங்கத் துறையினர் அறிவித்திருந்தனர்.
அந்தக் கொள்கலன்களை கனடாவுக்கே திருப்பி அனுப்பிவிடுமாறு பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டில் உத்தரவிட்ட நிலையிலும், அவற்றை பிலிப்பைன்ஸிலேயே அழித்துவிடுமாறு கனடா கடந்த ஆறு ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்தது.
எனினும், அதனை ஏற்க மறுத்த பிலிப்பைன்ஸ், குப்பைக் கொள்கலன்களைக் கப்பலில் ஏற்றி கனடாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப் போவதாகவும், கனடாவுடன் போர்ப் பிரகடனம் செய்வதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து கனடாவுக்கும், பிலிப்பைன்ஸ்ற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அத்தோடு பிலிப்பைன்ஸ் பயணத்தடைகளை விதித்ததுடன், அந்நாட்டின் கனடாவிற்கான தூதுவரும் மீள அழைத்தது.
இதனைதொடர்ந்து, பிலிப்பைன்ஸின் கடுமையான அழுத்தங்களுக்கு பின்னர் கனடா, தங்களது குப்பைகளை மீள அழைத்துக் கொண்டது. ஆகையால் தற்போது இரு நாடுகளுக்கிடையிலான மோதல் சற்று குறைந்துள்ளது.