தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த 8 ஆம் திகதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- தென்மேற்கு பருவ காற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டு இருக்கிறது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இதனால் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மலைப்பிரதேசங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.