முதாட்டி ஒருவரின் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ஸ்வீடனின் பிரபல கொலைக்குற்றவாளியை நாடுகடத்த வேண்டுமென்று ஜேர்மன் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் Blanka Zmigrod என்ற 68 வயது மூதாட்டி கடந்த 1992 ஆம் ஆண்டு உணவு விடுதி ஒன்றில் இருந்து தமது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் தலையில் குறி வைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளார்.
இந்த வழக்கு கடந்த 24 ஆண்டுகளாக போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இழுபறியிலேயே இருந்து வந்தது. தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஸ்வீடன் நாட்டில் பிரபலமான கொலை குற்றவாளி ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையை முடிக்கிவிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டையே உலுக்கிய பிரபல குற்றவாளி ஜான் ஆசோனியஸ் அங்குள்ள பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் வெளிநாடுகளில் எங்கெல்லாம் சென்றார் என்ற தகவலை விசாரித்த அதிகாரிகளுக்கு பிராங்பர்ட் நகரில் குறிப்பிட்ட உணவு விடுதியில் இவர் தங்கியிருந்தது தெரிய வந்தது.
மட்டுமின்றி குறித்த மூதாட்டியுடன் ஒரு விவகாரம் தொடர்பில் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பொலிசாருக்கு விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. மேலும் மூதாட்டியின் கொலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆயுதமும் ஆசோனியஸ் பயன்படுத்தும் 6.35mm துப்பாக்கி எனவும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
குறித்த நபரை கைது செய்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலை வழக்கு தொடர்பில் ஜேர்மன் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இது தொடர்பில் எந்த தகவல்களையும் குற்றவாளி ஆசோனியஸ் வெளியிட மறுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் பொலிசார் மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக குறித்த குற்றவாளியை விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின்போது அவர் நடந்தவற்றை ஜேர்மன் பொலிசாருடன் பகிர்ந்துகொண்டாதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மூதாட்டி கொலை வழக்கு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள குறித்த நபரை ஜேர்மன் நாட்டுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்வீடன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் ஜேர்மன் பொலிசார்.
The Laser Man என அறியப்படும் 63 வயதான John Ausonius 1991 ஆகஸ்ட் மாதம் தொடங்கி 1992 ஜனவரி மாதம் முடிய 11 நபர்களை மர்மமான முறையில் படுகொலை செய்துள்ளார். இதில் பெரும்பாலானோர் கறுப்பின குடிபெயர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.