தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பெர்த் மருத்துவர், ஜூரிகளால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 49 வயதான இவர் சிங்களப் பின்னணி கொண்டவர்.
2017 ஆம் ஆண்டு டிசெம்பரில், இலங்கையைச் சேர்ந்த பிரியந்த மத்மிக் தயானந்த என்ற மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்மீது பாலியல் ரீதியான தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தாக்குதலையடுத்து அந்தப் பெண் சிகிச்சை நிலையத்திலிருந்து வெளியே ஓடிச்சென்று டக்ஸியை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு போனதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், குற்றச்சாட்டினை முற்றாக மறுத்துள்ள ஒரு குழந்தையின் தந்தையான மருத்துவர், முறைப்பாடு மேற்கொண்ட பெண்ணின் மீது எந்த நிலையிலும் தான் தப்பாக நடந்துகொள்ளவில்லை என்றும், அந்தப்பெண்ணின் மீது மையல் கொள்ளுமளவுக்கு அவரொன்றும் வசீகரமானவர் இல்லை என்றும் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார். அந்தப்பெண் குழப்பமான மனநிலைகொண்டவராக தனக்கு தென்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கணவனால் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட இப்பெண் முதற்கட்ட விசாரணையின் போது தன்மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டவர் என வேறொரு மருத்துவரை அடையாளம் காட்டியிருந்த பின்னணியில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இழுபறிபட்டு நேற்று பத்துமணி நேர ஜூரிகளின் கலந்தாலோசனையின் பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது.
மருத்துவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே சிறைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தபோதும் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. குற்றத்துக்கான நீதிமன்ற தண்டனை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும்.