பெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடர், தற்போது பிரான்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தமாக 24 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் போட்டிகள் 9 இடங்களில் நடைபெறுகின்றது.
இந்தநிலையில், இத்தொடரின் குழு நிலைப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
குழு டி பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ஜப்பான் அணியும், ஸ்கொட்லாந்து அணியும் மோதிக் கொண்டன.
ஸ்டேட் டி லா ரூட் டி லோரியண்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் ஜப்பான் அணி சார்பில், mana iwabuchi 23ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், yuika sugasawa 37ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் அடித்தனர்.
ஸ்கொட்லாந்து அணி சார்பில், lana clelland 88ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
………………
குழு சி பிரிவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், இத்தாலி அணியும் ஜமைக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
ஸ்டேட் அகஸ்டே டெலூன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இத்தாலி அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
இதில் இத்தாலி அணி சார்பில், cristiana girelli 12ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலையும், 25ஆவது மற்றும் 46ஆவது நிமிடங்களில் மேலும் இரு கோல்களையும் என மொத்தமாக மூன்று கோல்கள் அடித்தார்.
மேலும், aurora galli 71ஆவது மற்றும் 81ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களும் அடித்தார்.
……………..
குழு டி பிரிவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், இங்கிலாந்து அணியும் ஆர்ஜெண்டீனா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
ஸ்டேட் ஓகேன்விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோடீ டெய்லர் 61ஆவது நிமிடத்தில், அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.