இராணுவ வீரரின் வீட்டில், குளிர்சாதன பெட்டிக்கு பின்புறம் நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. இதனால் மக்கள் குளிசாதான பெட்டி போன்ற பொருட்களை உபயோகித்து வெயிலின் தாக்கத்தை தணிக்கின்றனர்.
இது போன்ற குளிரூட்டிகளில் பாம்புகள் குடிபுகுந்ததாக கூறப்படும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
இந்த வரிசையில், தற்போது கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில், குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் பாம்பு பதுங்கியிருந்த சம்பவமும் சேர்ந்துள்ளது.
போச்சம்பள்ளி அருகே பலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் ஒரு ராணுவ வீரர். இன்று காலை அவர் வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறத்திலிருந்து ஏதோ சத்தம் வந்ததால் என்னவென்று பார்க்க முற்பட்டார்.
அப்போது அந்த குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அஷோக் குமார் தனது நண்பர் நாராயணசாமி என்பவருக்கு உடனே தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து குளிர்சாதன பெட்டியின் பின்புறம் பதுங்கியிருந்த நாகப்பாம்பை இருவரும் லாவகமாக பிடித்தனர். இந்த சம்பவம் பலம்பாடி கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.