எழுபது ரூபா பணத்தைக் கொண்டு தொழில ஒன்றை ஆரம்பித்த நான் தற்போது 43 நிறுவனங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன் என ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எழுபது ரூபா பணத்தினைக் கொண்டு தொழிலொன்றை ஆரம்பித்த நான் தற்போது நாற்பத்து மூன்று நிறுவனங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.
எனது நிறுவனங்களில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடமையாற்றி வருகின்றார்கள். இதுபோல் ஏன் நீங்களும் முயற்சிக்கக்கூடாது.
அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்ச நிலை தற்போது குறைவடைந்து மக்கள் இயல்பு நிலைக்கு மாறிய போதிலும் உல்லாசப் பயணத் துறை பாரிய பின்னடைவினைச் சந்தித்திருக்கின்து.
இனவாதச் செயற்பாடுகளை சில ஊடகங்கள் வேண்டுமென்றே மேற்கொண்டு வருவதை நாம் காண்கின்றோம்.
அனைத்து இனத்திலும் சிறு தொகையினர் இந்த இனவாதச் செயற்பாடுகளை தூண்டிய வண்ணமே உள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் களத்தில் இறங்கி செயற்படவேண்டியுள்ளது.
எமது நாட்டிலுள்ள சிறுபான்மைச் சமூகத்தினை பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.
எமது நாட்டில் தற்போது இருபத்தொரு இலட்சம் பேர் சமுர்த்தி உதவி பெறும் திட்டத்தின் கீழ் உள்ளனர்.
அத்தோடு இருபத்தாறு இலட்சம் பேர் முதியவர்கள் சமூக சேவைத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்களோடு கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் குடும்பத்தினை தலைமை தாங்கும் விதவைப் பெண்கள் இந்நாட்டில் ஆறு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் எமது நாட்டில் இருபது இலட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கவீனர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.