முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்படும் நிபந்தனை மீறிய தொழில்களால் தமது தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் உள்ள கடற்தொழிலை நம்பி சுமார் 4500 இற்குமேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், அங்குள்ள கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் பல்வேறு வகையான சட்டவிரோத தொழில்களும் நிபந்தனை மீறிய தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய அங்கு நிலவும் வறட்சி காரணமாக நந்திக்கடல் நீர்மட்டம் குறைவடைந்து சிறுகடற்தொழிலாளர்களின் தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஆழ்கடல்பகுதிகளல் சுருக்கு வலை பயன்படுத்துதல் வெளிச்சம் பாச்சுதல் போன்ற நிபந்தனைகளை மீறிய வகையில் மீனவர்கள் செயற்படுகின்றதாகவும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வளர்மதி கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
அதோடு ஆழிப்பேரலையாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மீனவ சங்கத்தின் பிரச்சனைகள் தொடர்பில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தொழில் வாய்ப்பு முழுயையாக இழக்கப்பட்டநிலையில் மீனவர்கள் தற்கொலைக்கு செல்லும் நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.