நீரின்றி அமையாது உலகு. எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் நீர். அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமான நீரின்றி அல்லற்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.
நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில், வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் வறட்சி நிலவுகிறது.
வடக்கு, கிழக்கில் தாண்டவமாடும் கொடுமையான வறட்சி காரணமாக, பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது அத்தியாவசியத் தேவைக்கு கூட நீர் கிடைக்காமல் பாரியளவிலான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக புங்குடுதீவு, மண்டைதீவு மற்றும் காரைதீவு உள்ளிட்ட யாழ். தீவகப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவக மக்களின் ஜீவனோபாயமாகக் காணப்படுவது மீன்பிடித் தொழில். இங்குள்ள குளங்கள் மற்றும் சிறுகடல்கள் தற்போது நீரின்றி நிலப்பரப்பாகக் காட்சியளிக்கின்றன.
மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கின்ற சிறுதொகை வருமானத்தில் குடும்பச்செலவு, பிள்ளைகளின் கல்வி மற்றும் இதர தேவைகளை முன்னெடுத்துவரும் இவர்கள், இன்று வறண்ட பூமியைப் பார்த்து மழைக்காகக் காத்திருக்கின்றார்கள்.
வீதியின் இருமருங்கிலும் பச்சைப் பசேலெனக் காணப்படும் வயல் நிலங்கள் தற்போது வறண்டு, பாலம் பாலமாய் வெடித்துப்போய் வானம் பார்த்த பூமியாகக் காட்சியளிக்கின்றன.
கடந்த 6 மாத காலமாக மழையைக் காணாத இந்த மக்கள் தமது குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருப்பது மாத்திரமல்லாது, சிறுவர்கள் நோய்த் தொற்றுக்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். அல்லது சுமார் 3 கிலோமீற்றர்கள் தூரம் பயணித்து நீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
இவர்களின் நிலை இவ்வாறு இருக்கையில், வாயில்லா ஜீவராசிகள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றன. காய்ந்த மரங்களில் துளிர்களைத் தேடும் கால்நடைகளோ உணவின்றியும் நீரின்றியும் உயிரிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
குடிக்கவே நீரின்றி சிரமப்படும் மக்கள், கால்நடைகளைக் கவனிப்பது எவ்வாறு? மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் வீடு திரும்புவதில்லை. வறட்சியின் கோரத்தால் அவை ஆங்காங்கே இறந்து விடுகின்றன.
கடந்த 30 வருடகால கொடூர யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த மக்கள், தற்போது வறட்சி போன்ற தொடர் இன்னல்களின் மத்தியில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தமது ஜீவனோபாயமான மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரண்டுமே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலங்கள் மாத்திரமல்லாது இங்குள்ள மக்களின் வயிறுகளும் காய்ந்து போயுள்ளன. ஆனால், அவர்களின் கண்ணீர் குளங்கள் மட்டும் வற்றவில்லை…