ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கும் முன்னரே இந்தியாவில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.
இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது.
தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 3,38,954 பாலியல் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.9 வீதமான அதிகரிப்பைக் காட்டுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிந்தவர்களாலேயே அதிகக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பதுடன், மேற்கு வங்கம், மராட்டியம் ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழகம் 19 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சிறுமி ஆசிஃபாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதி கோரியும் திருவாரூரில் இன்று மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த கல்லூரி மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அருகிலிருந்த கடைக்கு சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்ததைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவிகளை தவறான பாதையில் நடத்துவதற்கு முயற்சித்த பேராசிரியையான நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் – அருப்புக்கோட்டையில் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்மலாவிடம் இருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த தொலைபேசிகளில் இருந்து பெருமளவிலான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தவிர, உத்திர பிரதேசத்தின் ஈட்டா நகரில் திருமண விழாவிற்கு சென்றிருந்த 7 வயது சிறுமி ஒருவர், திருமணப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.