திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பூசகாரினால் கொலை செய்யப்பட்ட அவருடைய மனைவியின் எலும்பு கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கோயிலில் பூசாரியாக கடமையாற்றி வந்த சிவகாட்சி குருக்கள் விசா கேஸ்வர ஐயர் தனது மனைவியாகிய சொக்கலிங்கம் சிவபால சுந்தரப்பிள்ளை குரேஷ்வரி அம்பிகா என்றழைக்கப்படும்
தனது மனைவியை கழுத்தில் கயிற்றை விட்டு நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி இவ்வழக்கின் தீர்ப்பாக குற்றவாளிக்கு திருகோணமலை
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு பிழையானது என குறித்த எதிரியான ஐயர் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ததையடுத்து, மீண்டும் அதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்தத் தீர்ப்பை வாசித்து காண்பிப்பதற்காக குற்றவாளி இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதன்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு வாசித்து விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஐயரின் மனைவியின் எலும்புக்கூடுகள் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
எலும்புக்கூடுகளின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் நீதிபதியினால் வினவப்பட்ட போது குற்றவாளி தனது மகனை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாகவும்,
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாகவும் மேற்குறிப்பிடப்பட்ட குற்றவாளியினுடைய மகனை எதிர்வரும் 08.05.2019 திகதி மன்றில் ஆஜராகுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளியான ஐயரை அன்றைய தினத்தில் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.