உலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்களில் 3/2 வீதமானவர்கள் ஐந்து நாடுகளில் மாத்திரமே தங்கியுள்ளனர்.
இதேவேளை, சிரியா, ஆப்கானிஸ்தான், தென்சூடான், மியன்மார் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளிலேயே அதிகளவான அகதிகள் தங்கியுள்ளனர்.
உலகில் அதிகளவில் சிரியாவிலேயே அகதிகள் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில், மெக்ஸிக்கோவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயமானது, சர்வதேசத்தின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.
அதேநேரம், இலங்கையில் 1610 அகதிகள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் அரசியல் தஞ்சம் கோரி
829 பேர் இலங்கையில் தங்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடப்பட்டுள்ளது.
அகதிகளுக்கான கொள்கைப் பிரகடனத்தை 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கைச்சாத்திட்டது.
எனினும், குறித்த பிரகடனத்தில் இலங்கை இதுவரை கையொப்பமிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அதில் கைச்சாத்திடவில்லை என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அகதிகள் தொடர்பான சிக்கல்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் வகையில் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்துடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.