கடந்த 5 வருடங்களில் நல்லாட்சி என்ற முகமூடி அணிந்த இந்த இரண்டு பாம்புகளும் ஒன்று சேர்ந்த ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் ஒரு சில இடங்களில் இராணுவத்தை பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேற்றிவிட்டு ஆயிரக்கணக்காண எமது காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மகாவலி திட்டத்தால் வடகிழக்கு மக்;களுக்கு தீமையே ஒழிய நன்மை எதுவும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர் இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் பின்னணியில் மூன்று பிரதான காரணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை எம் மக்கள் புரிந்தும் புரியாது வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த வடகிழக்கின் நில அபகரிப்பு, வடக்கு, கிழக்கில் குடிசன பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துதல், தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பை குறுக்கே சிங்கள மக்களை நுழைத்து குடியேறச் செய்து துண்டாடுதல் என அவை அமைந்திருந்தன.