கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரும் மக்களுக்கு ஆதரவாக தம்முடன் இணைந்து ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறக்கத் தயாரா என சவால்விடுத்து அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளது.
நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன் கைகோர்த்து அவர்களுக்காக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறியத் தயார். பதவிகளை மக்கள் வழங்குவது அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவேயன்றி பிரச்சினை வரும் போது வீர வசனம் பேசி விட்டு அதன் சொகுசுகளை அனுபவிக்கவல்ல எனவும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்,
கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இப்போதே தூக்கியெறிந்து செல்லத் தயார் என்ற போதிலும் தனியொருவருடைய இராஜினாமா எந்தவொரு பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்ற வரலாற்று பூர்வ யதார்த்தத்தை அறிந்துள்ளேன்.
எனவேதான் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒட்டு மொத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் ஊடாக கல்முனை மக்களின் நீண்ட நாள் கனவான, தரமுயர்ந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை நனவாக்க முடியும்.
இந்த வரலாற்று திருப்புமுனையை யதார்த்தமாக்க வடக்கு கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார் என்றால் அவர்களுடன் இணைந்து தமது இராஜினாமா கடிதத்தினையும் தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்க நான் முன்னிற்கிறேன்.
எனவே தமிழர்களின் ஒருமித்த பலத்தினை முழுதேசத்திற்கும் எடுத்துக் காட்டி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயகப்போரின் முதல் அத்தியாத்தை எழுதுவதற்கு அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்க்க வேண்டும்.
அத்துடன், தமிழ் மக்களின் இறைமைகளை தொடர்ந்தும் அடகு வைக்காமல் மக்களின் போராட்டங்களோடு ஒன்றிணைந்து வெற்றிபெற செய்ய தமிழர் பிரதிநிதிகள் இராஜினாமா கடிதத்தை வழங்க முன்வரவேண்டும்.
தமிழ் அரசியல் தலைமைகளின் பிரிவினால் கடந்த காலங்களில் பல மக்கள் போராட்டங்களை வெற்றி பெறச்செய்ய முடியாமல் போன யதார்த்தத்தை உணர்ந்து இதனை சிறந்த தருணமாக எண்ணி மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு பலம் சேர்க்க அனைத்து தமிழ் அரசியல் தலைமைளும் எம்முடைய இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.